மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா


மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா
x
தினத்தந்தி 2 March 2018 3:15 AM IST (Updated: 2 March 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்றது. அதேபோல அழகர்கோவில் கள்ளழகர் திருக்கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நடைபெற்றது.

மதுரை,

உலகப்பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மாசி திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் 10-வது நாள் திருவிழாவான நேற்று தீர்த்தவாரி நிகழ்ச்சியில் தங்க ரிஷப வாகனத்தில் சுந்தரரேசுவரர்-பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி வைகை ஆற்றின் கரையில் திருமலைராயர் படித்துறையில் அமைந்துள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் எழுந்தருளினர். அங்கு சாமிகளுக்கு தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

இதேபோல அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் நடைபெற்ற மாசி மகத்தெப்பத்திருவிழாவில், நேற்று முன் தினம் மாலை கஜேந்திரமோட்ச விழா நடந்தது. தொடர்ந்து நேற்று காலை கோவிலில் இருந்து பெருமாள் தேவியர்களுடன் பல்லக்கில் எழுந்தருளி வழிநெடுகிலும் உள்ள மண்டகபடிகளில் பக்தர்களுக்கு காட்சி தந்தார்.

தொடர்ந்து பொய்கைகரைபட்டி கிராமத்தின் வழியாக மண்டூகதீர்த்தம் என்ற பொய்கைகரை புஷ்கரணி தெப்பத்திற்கு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் குளக்கரையை சுற்றிவந்து கிழக்குபுறம் உள்ள திருக்கோவில் மண்டகபடியில்சுவாமி எழுந்தருளினார். அப்போது கள்ளழகர் என்ற சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி, பூமிதேவியருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த வருடம் கடும் வறட்சியின் காரணமாக போதுமான மழை பெய்யவில்லை. இதனால் தெப்பகுளம் தண்ணீர் இல்லாமல் வறண்டு போய்விட்டது. இதையொட்டி பெருமாள் பல்லக்கில் குளக்கரையை மட்டும் சுற்றி வந்த பின்பு, மாலையில் வந்த வழியாக கோவிலுக்கு சென்றடைந்தார். முன்னதாக இந்த விழாவில் வெள்ளியங்குன்றம் ஜமின்தார் சண்முகராஜ புலிகேசிபாண்டியர், மேலூர் தொகுதி எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து, கண்காணிப்பாளர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். அப்பன்திருப்பதி போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

தொடர்ந்து மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் மாசி மகத்தெப்பதிருவிழாவில் நேற்று மாலை டவுன்ஹால் ரோட்டில் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட பூச்சப்பரத்தில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தரராஜபெருமாள் எழுந்தருளி தெப்பகுளத்திலுள்ள மைய மண்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஒத்தக்கடை அருகே திருமோகூரில் உள்ள காளமேகப்பெருமாள் நேற்று காலை கோவிலில் இருந்து கள்ளழகர் திருக்கோலத்தில் பல்லக்கில் எழுந்தருளி, அருகில் உள்ள நரசிங்கம் ஊருக்கு சென்றார். அங்கு இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கஜேந்திர மோட்சத்திருவிழா நடைபெற்ற பின்பு வழியெங்கும் இருந்த பக்தர்களின் மண்டகப்படிகளுக்கு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதுரை வடக்கு மாசி வீதி நவநீத கிருஷ்ணன் கோவிலில் பெருமாள் மாசி மகத்தெப்பதிருவிழாவையொட்டி கோவிலில் இருந்து நேற்று பல்லக்கில் எழுந்தருளி கோவிலுக்கு சொந்தமான திருப்பாலையில் அமைந்துள்ள தெப்பக்குளத்திற்கு வந்தார். அதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.

Next Story