வல்லடிக்காரர் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு


வல்லடிக்காரர் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு
x
தினத்தந்தி 2 March 2018 3:30 AM IST (Updated: 2 March 2018 3:11 AM IST)
t-max-icont-min-icon

மேலூர் அருகே வல்லடிக்காரர் கோவில் திருவிழாவையொட்டி மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அதில் காளைகள் முட்டி 3 பேர் படுகாயமடைந்தனர்.

மேலூர்,

மேலூர் அருகே உள்ளது வெள்ளலூர். இந்த ஊரை அடுத்து உள்ள வல்லடிக்காரர்கோவிலில் மாசித்திருவிழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. முன்னதாக கோவிலில் சாமிக்கு பல்வேறு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதையடுத்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கோவில் முன்பாக அமைக்கப்பட்டிருந்து வாடிவாசல் பின்புறம் உள்ள தொழுவத்தில் 800-க்கும் மேற்பட்ட காளைகள் நிறுத்தப்பட்டன.

இதில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுபிடி வீரர்கள் வந்திருந்தனர். மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி தொடங்கியதும், பாரம்பரிய வழக்கப்படி கிராம பெரியவர்கள் கோவிலில் இருந்து மஞ்சுவிரட்டு நடைபெற்ற இடத்துக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். அவர்கள் கோவில் காளைகளுக்கு மரியாதைகள் வழங்கிய பின்பு, அந்த காளைகள் முதலில் அவிழ்த்து விடப்பட்டு மஞ்சுவிரட்டு தொடங்கியது.

அதைத்தொடர்ந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை, மாடுபிடி வீரர்கள் மடக்கி பிடித்தனர். நிகழ்ச்சியில் வீரர்கள் பிடியில் சிக்காமல் காளைகள் பாய்ந்தோடின. மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். வெள்ளலூர்நாடு சார்பில் அனைத்து காளைகளுக்கும் மரியாதைகள் செய்யப்பட்டு, சிறந்த காளைகளுக்கு வெள்ளிக்காசுகள் பரிசாக வழங்கப்பட்டன. மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதிகா தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Next Story