சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம்: ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவு


சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம்: ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவு
x
தினத்தந்தி 2 March 2018 4:00 AM IST (Updated: 2 March 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு படைக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் வழங்க ரூ.2 கோடி லஞ்சம் பெறப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு படைக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரூ.2 கோடி லஞ்சம்

சொத்து குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பரப்பனஅக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், பரப்பனஅக்ரஹாரா சிறையில் முறைகேடுகள் நடப்பதாகவும், சசிகலாவுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடியை அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் லஞ்சமாக பெற்றதாகவும் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம்சாட்டினார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையில் உயர்மட்ட குழு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணை அறிக்கை மாநில அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறையில் சில முறைகேடுகள் நடப்பது பற்றி கூறப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.

பரிந்துரைகள் ஏற்பு

மேலும், சிறை முறைகேடுகளை தடுக்க சில பரிந்துரைகளும் அரசுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் அரசால் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளது. அதாவது, பரப்பனஅக்ரஹாரா சிறை முன்னாள் தலைமை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார், துணை சூப்பிரண்டு அனிதா ஆகியோரிடம் விசாரணை நடத்துவது, முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ், அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா ஆகியோர் தங்களின் பணி நடத்தை விதிகளை மீறி செயல்பட்டனரா? என்பது குறித்து விசாரிப்பது, சிறைக்கான புதிய நடத்தை விதிமுறைகளை 3 மாதத்துக்குள் தயாரித்து சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. அனுமதி பெறுவது.

லஞ்சப்புகார் குறித்து ஊழல் தடுப்பு படை விசாரிப்பது, சிறையில் உள்ள கண்காணிப்பு கேமரா, செல்போன் சிக்னலை செயல் இழக்கும் வகையிலான ஜாமர் கருவிகளை ஆண்டுதோறும் பராமரிப்பது, அத்துடன் எலெக்ட்ரானிக் கருவிகள் சரியாக செயல்படுகிறதா? என்பதை கவனிப்பது. விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் சிறை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவது உள்ளிட்ட பரிந்துரைகள் ஏற்று கொள்ளப்பட்டு உள்ளன.

வழக்குப்பதிவு

இதற்கிடையே, சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க ரூ.2 கோடி லஞ்சமாக பெறப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஊழல் தடுப்பு படைக்கு கடந்த 26-ந் தேதி மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஊழல் தடுப்பு படைக்கு விடுக்கப்பட்ட அரசு உத்தரவு குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுப்பதற்காக முன்னாள் சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து ஊழல் தடுப்பு சட்டம் 13(1)(சி) மற்றும் 13(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவு விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரவேற்பு

பெங்களூரு சிறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணை குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஏற்று கொண்டுள்ளது. இது தொடர்பாக ஊழல் தடுப்புபடை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டு இருக்கிறது. இது குறித்து போலீஸ் ஐ.ஜி.யும், ஊர்க்காவல்படையின் கூடுதல் பொது கமாண்டோவுமான ரூபா நேற்று கூறியதாவது:-

“சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுப்பதற்காக ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கும்படி ஊழல் தடுப்பு படைக்கு நான் ஏற்கனவே புகார் அனுப்பி இருந்தேன். நான் கொடுத்த புகார் மீதான விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அறிய தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரம் கேட்டு இருந்தேன். அதற்கு புகார் தொடர்பாக போதிய ஆதாரம் இல்லை எனவும் அதனால் விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது என்றும் எனக்கு பதில் கிடைத்தது.

இந்த சூழ்நிலையில் தற்போது பரப்பனஅக்ரஹாரா சிறை முறைகேடு குறித்த உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை மாநில அரசு ஏற்று கொண்டு, ரூ.2 கோடி லஞ்சம் கைமாறியது குறித்து ஊழல் தடுப்பு படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அனைத்து கோணங்களிலும் இந்த விசாரணை நடைபெற வேண்டும். சிறைத்துறையில் பணியாற்றியபோது நான் முறைகேடு எதுவும் செய்யவில்லை. சிறைத்துறை முறைகேடு தொடர்பாக என்னிடம் விசாரணை நடத்த முடிவு செய்தால் அதற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்”

இவ்வாறு ஐ.ஜி.ரூபா கூறினார்.

Next Story