அரசு நிதி உதவி பெறும் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை


அரசு நிதி உதவி பெறும் பள்ளியை பெற்றோர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 March 2018 3:45 AM IST (Updated: 2 March 2018 3:41 AM IST)
t-max-icont-min-icon

கசம் அருகே அரசு நிதி உதவி பெறும் பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காட்பாடி,

திருவலத்தை அடுத்த கசம் அருகே அரசு நிதி உதவி பெறும் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு போதுமான கழிப்பறை வசதி கிடையாது.

இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளின் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் போன்ற பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் கிடையாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று இந்த பள்ளியை பெற்றோர்களும், பொதுமக்களும் முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று தொடங்கியுள்ளது. ஆனால் இந்த பள்ளியில் பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கிலம், கணக்கு பாடங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் கிடையாது, மாணவர்கள் எப்படி இந்த 2 பாடங்களின் தேர்வுகளை எழுதுவார்கள் என்பது கவலையாக உள்ளது. இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதுகுறித்து நிர்வாகத்திடம் கூறி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி ஆசிரியர்கள் கூறியதை அடுத்து பெற்றோர்கள், பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

பெற்றோர்களின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story