பெண்ணுக்கு கத்திக்குத்து தடுக்க முயன்ற மகன் மீதும் தாக்குதல்


பெண்ணுக்கு கத்திக்குத்து தடுக்க முயன்ற மகன் மீதும் தாக்குதல்
x
தினத்தந்தி 3 March 2018 4:15 AM IST (Updated: 3 March 2018 12:10 AM IST)
t-max-icont-min-icon

பேட்டையில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. அதை தடுக்க முயன்ற மகனையும் தாக்கிய தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பேட்டை,

நெல்லை பேட்டை நேதாஜி நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி இந்திரா (வயது 50). இவர்களுடைய மகன் பாண்டியராஜன் (18) மாற்றுத்திறனாளி. ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் இந்திரா தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்தார்.

ராஜேந்திரனின் அண்ணன் ஞானகுரு (55). இவர் நெல்லை டவுனில் உள்ள இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலையில் ஞானகுரு, இந்திராவிடம் சென்று உனது வீட்டை எனக்கு எழுதித்தருமாறு கூறி தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த ஞானகுரு தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் இந்திராவை குத்தியதாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் தடுக்க முயன்றார். ஆனால் அவரையும் ஞானகுரு கீழே தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் அங்கு இருந்து தப்பிச் சென்று விட்டார்.

இந்த சம்பவத்தில் இந்திரா, அவருடைய மகன் பாண்டியராஜன் ஆகியோர் காயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய ஞானகுருவை வலைவீசி தேடிவருகிறார்.

Next Story