விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்


விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

திருவெண்ணெய்நல்லூரை அடுத்த அண்ட்ராயனூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 32), விவசாயி. இவர் தன்னுடைய நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தார். இதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக சித்தலிங்கமடத்தில் உள்ள உதவி மின் பொறியாளர் அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணியாற்றி வரும் அத்தண்டமருதூரை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (38) என்பவரை கோவிந்தன் அணுகினார்.

அப்போது ஆழ்துளை கிணற்றை பார்வையிட்டு அதற்கு மின் இணைப்பு வழங்க திருக்கோவிலூர் கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்புவதற்கு கோவிந்தனிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை லஞ்சமாக வாங்கியபோது பாலசுப்பிரமணியனை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

இந்த நிலையில் இதுசம்பந்தமான விசாரணை அறிக்கை மற்றும் முதல் தகவல் அறிக்கை நகல் லஞ்ச ஒழிப்பு போலீசில் இருந்து கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு வந்தது. இதையடுத்து சித்தலிங்கமடம் மின்வாரிய வணிக ஆய்வாளர் பாலசுப்பிரமணியனை துறை ரீதியாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சிவராஜ் உத்தரவிட்டுள்ளார்.

Next Story