3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்


3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல்
x
தினத்தந்தி 3 March 2018 4:00 AM IST (Updated: 3 March 2018 12:40 AM IST)
t-max-icont-min-icon

அந்தியூர், தாளவாடி பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குடிசை வீடுகள் எரிந்து சாம்பல் ஆனது.

ஈரோடு,

அந்தியூர் அருகே உள்ள கொல்லப்பாளையத்தை சேர்ந்தவர் பெருமாள். அவருடைய மனைவி தங்கமணி. இவர்களுக்கு 2 வயது ஆண் குழந்தை உள்ளது. பெருமாள் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று மதியம் வீட்டின் உள்ளே குழந்தை தொட்டிலில் படுத்து தூங்கிக்கொண்டு இருந்தது. பெருமாளும், தங்கமணியும் வீடு அருகே உட்கார்ந்து பேசி கொண்டிருந்தார்கள்.

அப்போது திடீரென்று வீட்டில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த 2 பேரும் உடனே குடிசைக்குள் சென்று, குழந்தையை தூக்கிக்கொண்டு வெளியே ஓடி வந்தார்கள். பின்னர் குடிசை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. மளமளவென பரவிய தீ காற்றின் வேகத்தில் அருகே உள்ள செல்வன் என்பவரது குடிசை வீட்டுக்கும் பரவியது. இதனால் வீட்டுக்குள் இருந்த செல்வன், அவருடைய மனைவி ஆகியோர் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தார்கள்.

இதுபற்றி உடனே அந்தியூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார்கள். அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 குடிசைகள் மீது எரிந்த தீயையும் அணைத்தார்கள். எனினும் குடிசைகள் எரிந்து சாம்பல் ஆனது.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் அந்தியூர் தாசில்தார் பாலகுமார், வருவாய் ஆய்வாளர் விஜயலட்சுமி, இ.எம்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ. ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் அவர்களுக்கு நிவாரணத்தொகையும் வழங்கினார்கள். மின்கசிவே தீ விபத்துக்கான காரணம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தார்கள்.

இதேபோல் தாளவாடி பகுதியில் மற்றொரு தீ விபத்து நடந்தது. தாளவாடி அருகே உள்ள தர்மாபுரத்தை சேர்ந்தவர் சித்தராஜ் (51). அவருடைய மனைவி மணியம்மா. இவர்கள் கூலித்தொழிலாளர்கள். சித்தராஜின் தாய் ரங்கம்மாள் (72). இவர் சித்தராஜின் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று காலை சித்தராஜும், மணியம்மாவும் வேலைக்கு சென்றுவிட்டார்கள். வீட்டில் இருந்த ரங்கம்மாள் மதியம் 12.15 மணி அளவில் வெளியே சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் குடிசை வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.

இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. குடிசை முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுபற்றிய தகவல் அறிந்ததும் மரூர் கிராம நிர்வாக அதிகாரி லதா சம்பவ இடத்துக்கு சென்று சேதம் அடைந்த குடிசையை பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட சித்தராஜுக்கு ஆறுதல் கூறினார்.

Next Story