ரூ.100 கோடி மதிப்பிலான 2 பஞ்சலோக சிலைகள் கொள்ளை


ரூ.100 கோடி மதிப்பிலான 2 பஞ்சலோக சிலைகள் கொள்ளை
x
தினத்தந்தி 3 March 2018 4:30 AM IST (Updated: 3 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் ரூ.100 கோடி மதிப்பிலான 2 பஞ்சலோக சிலைகள் கொள்ளை போனது. மேலும் பல சிலைகளும் மாயமானது போலீசாரின் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. மாமன்னன் ராஜராஜசோழன் கட்டிய இந்த கோவில் தற்போது இந்திய தொல்லியல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த கோவிலில் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், விநாயகர், சண்டிகேசுவரர், நடராஜர், முருகன், வராகி அம்மன் உள்ளிட்ட சன்னதிகள் உள்ளன. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. இந்த கோவிலுக்கு தினமும் இந்தியா மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த கோவிலுக்கு 13 பஞ்சலோக சிலைகளை பொய்கைநாட்டை சேர்ந்த தென்னவன் மூவேந்த வேளாண் வழங்கி உள்ளார். இந்த சிலைகள் அனைத்தும் கோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் 75 செ.மீ. உயரம் உடைய ராஜராஜ சோழன் சிலையும், அவருடைய பட்டத்து இளவரசி லோகமாதேவியார் சிலையும்(55 செ.மீ. உயரம் உடையது). இந்த 2 சிலைகளும் கொள்ளை யடிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் வி.வி.சுவாமிநாதன் சிலை கடத்தல்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் விசாரித்ததில் அது உண்மை என தெரிய வந்தது. இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். இந்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த 2 பஞ்சலோக சிலைகளும் ரூ.100 கோடி மதிப்புடையவை.

இந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் பேரில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி.பொன்மாணிக்கவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜாராமன், அசோக்குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கட்ராமன் ஆகியோர் நேற்று தஞ்சை வந்தனர்.

பின்னர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்துக்கு சென்று இது குறித்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் ஆகியோரிடமும் கொள்ளை போனது தொடர்பான விவரங்களை கேட்டறிந்தனர்.

இது குறித்து தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை பெரியகோவிலில் சிலைகள் கொள்ளை குறித்து தஞ்சை மேற்கு போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதன் பேரில் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் வந்து விசாரணை நடத்தினர். கொள்ளை போன சிலைகள் குறித்த ஆதாரங்கள் உள்ளன. அந்த சிலைகள் தற்போது குஜராத்தில் உள்ள கவுதம்சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அதனை மீட்டுக்கொண்டுவர நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்த சிலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பெரியகோவிலில் ருத்ராட்ச மாலை காணாமல் போனது தொடர்பாக எந்த புகார்களும் இல்லை. இதேபோல் சரசுவதி மகால் நூலகத்தில் பழமைவாய்ந்த நூல் மாயமானது குறித்தும் எந்த புகாரும் இல்லை. அது தொடர்பாக புகார் வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை செய்தபோது, பெரியகோவிலில் உள்ள சிலைகள் காப்பகத்தில் இருந்த மேலும் பல சிலைகள் மாயமானது தெரிய வந்துள்ளது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story