புதிய மேம்பாலம் இறக்கத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்


புதிய மேம்பாலம் இறக்கத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 March 2018 3:45 AM IST (Updated: 3 March 2018 2:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படும் என்பதால் புதிய மேம்பாலம் இறக்கத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டதை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மேரீஸ்கார்னர் பகுதியில் ரெயில்வே கீழ்பாலம் உள்ளது. மழைகாலங்களில் கீழ்பாலத்தில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்படும். அப்போது வாகனங்கள் எல்லாம் சாந்தப்பிள்ளை கேட் வழியாக செல்லும். ரெயில்கள் வரும்போது கேட் பூட்டப்பட்டு இருந்தால் வாகனங்கள் வெகுநேரம் காத்திருந்து செல்ல வேண்டியது வரும். இதை தவிர்க்கும் வகையில் சாந்தப்பிள்ளை கேட் பகுதியில் ரெயில்வே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்படி சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த 2014-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நெடுஞ்சாலைத்துறை, நபார்டு, கிராம சாலைகள் திட்டம் மூலம் ரூ.52 கோடி மதிப்பில் 570 மீட்டர் நீளத்தில், 12 மீட்டர் அகலத்தில் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இப்பாலத்தில் மேற்குபகுதியில் இறங்கும் இடத்தில் நாஞ்சிக்கோட்டை சாலை சந்திப்பும் சேருவதால் விபத்துகள் அடிக்கடி ஏற்படும் என இந்த திட்டம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மக்கள் எதிர்ப்பை மீறி புதிய மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வண்டிக்காரத்தெருவில் மேம்பாலத்தின் கிழக்கு பகுதி இறக்கத்தில் போடப்பட்டுள்ள தார் சாலையில் 100 அடி நீளத்திற்கு திடீரென விரிசல் ஏற்பட்டது. பக்கவாட்டு சுவரிலும் விரிசல் ஏற்பட்டது.

இதனால் மேம்பாலத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்த பின்னரே மேம்பாலத்தை திறக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

மேலும் புதிய மேம்பாலம் திறக்க ஐகோர்ட்டு மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. இதன் காரணமாக மேம்பாலம் திறக்கும் முடிவு கைவிடப்பட்டது. பின்னர் விரிசல் விழுந்த இடம் மட்டுமின்றி தார் சாலை முழுவதும் சீரமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது. மக்கள் பயன்பாட்டிற்காக இந்த மேம்பாலம் திறக்கப்பட்டபோது பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் உடனே மூடப்பட்டது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் எப்படியும் பாலத்தை திறக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறையினரும், போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி மேரீஸ்கார்னர் பகுதியில் மேம்பாலம் இறக்கத்தில் சாலையின் மையப்பகுதியில் 100 மீட்டர் தூரத்திற்கு சிமெண்டால் ஆன தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

நாஞ்சிக்கோட்டை பகுதியில் இருந்து வரக்கூடிய பஸ்கள், லாரிகள் அனைத்தும் கல்லுக்குளம் வழியாக செல்லவும், மோட்டார் சைக்கிள்கள் மேம்பாலம் இறக்கத்தில் வைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை கடந்தும் செல்லவும், தஞ்சையில் இருந்து நாஞ்சிக்கோட்டை பகுதியை நோக்கி செல்லக்கூடிய பஸ்கள், லாரிகள், மோட்டார் சைக்கிள்கள் அனைத்தும் மேம்பாலத்தின் கீழே உள்ள பாதையில் வந்து நாஞ்சிக்கோட்டை சாலைக்கு செல்லும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேரீஸ்கார்னர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிகளுக்கு காலை நேரத்தில் குழந்தைகளை ஆட்டோவிலும், மொபட்டிலும் அழைத்து வருவதும், மாலை நேரத்தில் பள்ளி முடிந்தவுடன் அதேபோல அழைத்து செல்வதும் வழக்கம். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படும். இந்தநிலையில் மேம்பாலத்தை திறந்தால் பஸ்கள், லாரிகள் போன்ற வாகனங்கள் வேகமாக வந்து செல்லும். இதனால் விபத்துக்கள் அடிக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று கூறி பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள், பொதுமக்கள் நேற்றுகாலை தஞ்சை மேரீஸ்கார்னர் மேம்பாலம் இறக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்றும், புதிய மேம்பாலத்தை திறக்கக்கூடாது என்றும் கோஷங்கள் எழுப்பினர். இதை அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story