வரி உயர்வை கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் கடையடைப்பு-பேரணி
வரி உயர்த்தப்பட்டதையொட்டி ஒட்டன்சத்திரம் நகராட்சியை கண்டித்து கடையடைப்பு-பேரணி நடந்தது.
ஒட்டன்சத்திரம்,
ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் குடிநீர்வரி, சொத்துவரி, தொழில்வரி, திடக்கழிவுமேலாண்மை வரி உள்ளிட்டவற்றை நகராட்சி நிர்வாகம் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி உயர்த்தியதாக கூறப்படுகிறது. பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையொட்டி வரியை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால் வரியை குறைக்க நகராட்சி நிர்வாகம் மறுத்ததாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஒட்டன்சத்திரத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் அறிவித்தனர். அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
இதையொட்டி ஒட்டன்சத்திரம் நகர் முழுவதும் உள்ள சிறிய கடைகள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து ஒட்டன்சத்திரம் வர்த்தகர் சங்கம், காந்தி காய்-கனி மார்க்கெட் சங்கம், தயிர்வெண்ணெய் மார்க்கெட் சங்கம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் கண்டன பேரணி அர.சக்கரபாணி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகளின் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. இதில், தி.மு.க. மேற்கு மாவட்ட அவைத்தலைவர் மோகன், நகர செயலாளர் வெள்ளைச்சாமி, வர்த்தக சங்க தலைவர் சுப்பிரமணி, காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வியாபாரிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து அவர்கள் நகராட்சி ஆணையாளர் இளவரசை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது வருகிற 15-ந் தேதி அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கங்களை அழைத்து பேசி நல்ல முடிவு எடுப்பதாகவும், அதுவரை யாரிடம் எவ்வித வரியும் வசூல் செய்யப்படமாட்டாது என ஆணையாளர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து சென்றனர்.
Related Tags :
Next Story