திருச்சியில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி மே மாதம் நடக்கிறது


திருச்சியில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி மே மாதம் நடக்கிறது
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மாநில அளவிலான டென்னிஸ் போட்டி மே மாதம் நடைபெற உள்ளது.

திருச்சி,

திருச்சி மாவட்ட நிர்வாகம், மாநகரக் காவல் துறை மற்றும் டென்னிஸ் விளையாட்டு ஆர்வலர்களால் முதல் முறையாக மாநில அளவிலான இளையோருக்கான டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. இப்போட்டிகள், வருகிற மே மாதம் 17-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அமைந்துள்ள செயற்றை இழை டென்னிஸ் மின்னொளி மைதானத்தில் நடைபெறும். 12, 14 மற்றும் 16 வயதிற்குட்பட்ட ஆண், பெண் விளையாட்டு வீரர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

போட்டியில் வெற்றிபெறும் வீரர்களுக்கு முதல் பரிசாக ரூ.20 ஆயிரமும், இரண்டாம் பரிசாக ரூ.15 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ. 10 ஆயிரம் மற்றும் நான்காம் பரிசாக ரூ. 5 ஆயிரம் என தனித்தனி பிரிவுகளில் வழங்கப்படுகிறது. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

போட்டியில் கலந்துகொள்ளும் டென்னிஸ் வீரர்கள் பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வருதல் வேண்டும். பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியரிடமிருந்து வயதுச் சான்றிதழ் பெற்று வராத மாணவ, மாணவிகள் போட்டியில் கலந்து கொள்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு குறைந்த செலவில் தங்கும் இடம், விடுதி வசதி ஏற்பாடு செய்து தரப்படும்.

போட்டியில் பங்குகொள்பவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூ. 250 செலுத்தி தங்கள் பெயர்களை முன்பதிவு செய்ய வேண்டும். நுழைவுக் கட்டணத்தை மே மாதம் 17-ந் தேதி அன்று காலை திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள டென்னிஸ் விளையாட்டு மைதானத்தில் வந்து நேரடியாக செலுத்தலாம். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவ, மாணவிகள் மே மாதம் 15-ந் தேதி அன்று மாலை 5 மணிக்குள் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு பதிவு செய்யாதவர்கள் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள்.

இந்த தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் .ராஜாமணி, மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

Next Story