சேர்வைகாரனூரில் விவசாயி கொலை வழக்கில் 2-வது மனைவி கைது
சேர்வைகாரனூரில் விவசாயி கொலை வழக்கில் 2-வது மனைவியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தரகம்பட்டி,
தரகம்பட்டியை அடுத்த ஆதனூர் ஊராட்சி சேர்வைகாரனூரை சேர்ந்தவர் மருதை(வயது 75). விவசாயியான இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இவரது 2-வது மனைவி மகாலட்சுமி(40). மருதை தினசரி வீட்டில் சாப்பிட்டுவிட்டு இரவில் அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்திற்கு சென்று தங்குவது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந் தேதி இரவு தோட்டத்திற்கு சென்றவர் நேற்று முன்தினம் தோட்டத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன், சிந்தாமணிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்- இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ‘ஜெசி’ வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் சம்பவ இடத்தை மோப்பம் பிடித்துவிட்டு அங்கிருந்து சென்று ஊருக்குள் உள்ள அவரது சொந்த வீட்டில் நின்றது.
இதையடுத்து கொலையாளியை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின் பேரில், குளித்தலை துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகருப்பன் மேற்பார்வையில், தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தினர். மோப்பநாய் மருதை வீட்டிற்கு சென்று நின்றதை வைத்து நடத்திய விசாரணையில் மருதையை அவரது 2-வது மனைவியே கொலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து நடத்திய விசாரணையில் அவர் வாக்குமூலம் அளித்ததாவது:-
நான் (மகாலட்சுமி) அருகில் உள்ள செங்கல் சூளைக்கு தினசரி வேலைக்கு சென்று வந்தேன். இந்த நிலையில் எனது கணவருக்கும், எனக்கும் இடையே பணம் சம்பந்தமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. வழக்கம் போல் கடந்த 28-ந் தேதி இரவும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவர் தோட்டத்தில் படுத்திருந்தபோது அவரது தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன். பின்னர் எனக்கு ஒன்றும் தெரியாதது போல் வீட்டிற்கு வந்து படுத்துக்கொண்டேன். வழக்கம் போல் மறுநாள் காலை தோட்டத்திற்கு செல்வது போல் சென்று எனது கணவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக நாடகம் ஆடினேன். ஆனால் என்னை போலீசார் கண்டுபிடித்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story