காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்


காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்
x
தினத்தந்தி 3 March 2018 3:30 AM IST (Updated: 3 March 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

காரைக்குடி-பட்டுக்கோட்டை அகல பாதையில் ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது. இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.


அறந்தாங்கி,

காரைக்குடி, பட்டுக்கோட்டை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி இடையே 187 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்ற கடந்த 2012-ம் ஆண்டு ரூ.1700 நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பணி தொடங்கியது. முதல் கட்டமாக சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை வரையிலான 73 கி.மீ தூரமுள்ள மீட்டர் கேஜ் ரெயில் பாதையை அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி ரூ.700 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது.

இந்த பணி கடந்த 6 ஆண்டுகளாக நடந்து முடிந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அகல ரெயில் பாதை பணிகளை தெற்கு ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில், தலைமை நிர்வாக அதிகாரி கதாகர்ராவ், திருச்சி கோட்ட ரெயில்வே மேலாளர் உதயகுமார் ரெட்டி மற்றும் அதிகாரிகள் டிராலியில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை காரைக்குடி ரெயில் நிலையத்தில் இருந்து பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு 2 பெட்டிகள் கொண்ட அதிவேக சிறப்பு ரெயில் சோதனை ஓட்டம் தெற்கு ரெயில்வே பாதுகாப்பு அதிகாரி மனோகரன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் மாலையில் பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் இருந்து காரைக்குடி ரெயில் நிலையம் வரை சோதனை ஓட்டம் நடந்தது. அதிவேகமாக இயக்கப்பட்ட இந்த ரெயில் அறந்தாங்கி ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது பொதுமக்கள் ஆர்வத்துடனும், ஆச்சரியத்துடனும் பார்த்து மகிழ்ந்தனர்.

80 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்ட ரெயில் இயக்கப்பட்டதாக ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அகல ரெயில் பாதையில் ரெயில் வெள்ளோட்டம் விடப்பட்டதால், விரைவில் இந்த தடத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என தெரிகிறது

Next Story