அய்யாக்கண்ணு தலைமையில் நடந்துவரும் விவசாயிகளின் பிரசாரத்துக்கு எதிராக பா.ஜனதா கட்சியினர் திரண்டனர்


அய்யாக்கண்ணு தலைமையில் நடந்துவரும் விவசாயிகளின் பிரசாரத்துக்கு எதிராக பா.ஜனதா கட்சியினர் திரண்டனர்
x
தினத்தந்தி 4 March 2018 4:15 AM IST (Updated: 3 March 2018 10:35 PM IST)
t-max-icont-min-icon

ஆரல்வாய்மொழியில் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்து வரும் விவசாயிகளின் பிரசாரத்துக்கு எதிராக திடீரென பா.ஜனதா கட்சியினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆரல்வாய்மொழி,

நஞ்சில்லா உணவு மூலம் மனித குலத்தை மீட்கவும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய வலியுறுத்தியும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் விழிப்புணர்வு பயணம் கன்னியாகுமரியில் இருந்து கடந்த 1–ந் தேதி தொடங்கியது. சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் இந்த பயணம் நடைபெற்று வருகிறது.

இவர்கள் குமரி மாவட்டத்தில் பல இடங்களுக்கு சென்று மக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர். மேலும், நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்த னர். நேற்று முன்தினம் இரவில் செண்பகராமன்புதூரில் தங்கினர். நேற்று காலையில் அங்கிருந்து ஆரல்வாய்மொழி நோக்கி தங்கள் பயணத்தை தொடங்கினர். செல்லும் வழியில் உள்ள வயல் பகுதிகளில் அறுவடை பணி நடந்து கொண்டிருந்தது. வயல்களில் இறங்கி விவசாயிகளுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இவர்கள் ஆரல்வாய்மொழி வழியாக செல்வதை அறிந்ததும், அந்த பகுதியை சேர்ந்த பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டு நின்றனர். அய்யாக்கண்ணு மத்திய அரசை குறைகூறி வருவதாகவும், மோடி அரசு குறித்து மக்களிடம் தவறான பிரசாரம் மேற்கொள்வதாகவும் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது, சிலர் கைகளில் கருப்பு கொடிகளையும் வைத்திருந்தனர். இதில் பா.ஜனதா மாநில பொதுக்குழு உறுப்பினர் சொக்கலிங்கம், ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், பிரசார அணி செயலாளர் இசக்கி முத்து, மாதேவன் பிள்ளை உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. ஆரல்வாய்மொழி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையில் போலீசாரும் விரைந்து வந்தனர்.

இதற்கிடையே அய்யாகண்ணு தலைமையிலான விவசாய சங்கத்தினர் கடைகளில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியபடி ஆரல்வாய்மொழி சந்திப்பை நெருங்கினர். அவர்கள் நெருங்கி வருவதை அறிந்ததும், பா.ஜனதாவினர் கருப்பு கொடிகளை ஏந்தியபடி எதிராக சென்றனர். இதனால், அங்கு இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

உடனே, அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இருதரப்பினரையும் ஒழுங்குபடுத்தி மோதல் ஏற்படாமல் தடுத்தனர். ஒரு கட்டத்தில் இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் கடந்து செல்லும் போது, பா.ஜனதாவினர் அய்யாக்கண்ணுக்கு எதிராக கருப்பு கொடி காட்டி கோ‌ஷம் எழுப்பினர். அப்போது, அய்யாக்கண்ணுவும், அவருடன் சென்றவர்களும் பா.ஜனதாவினரை பார்த்து தங்களது இரு கைகளை கூப்பி, துண்டு பிரசுரங்களை வழங்கி தங்களின் விழிப்புணர்வு பயணத்துக்கு ஆதரவு கேட்ட நிலையில் பயணத்தை தொடர்ந்தனர்.

பின்னர், போலீசார் அய்யாகண்ணுவையும், அவருடன் சென்றவர்களையும் பாதுகாப்பாக காவல்கிணறு சந்திப்பு வரை சென்று, நெல்லை மாவட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

முன்னதாக, செண்பகராமன்புதூரில் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:–

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் ஆன உணவுகளையும், நஞ்சு உணவுகளையும் மக்களுக்கு கொடுத்து வருங்கால தலைமுறையை அழித்து விடக்கூடாது என கூறி நாங்கள் விழிப்புணர்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளோம். களக்காடு புலிகள் சரணாலயத்தை குமரி மாவட்டத்தில் விரிவுபடுத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்.

குமரி மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ரப்பர் தோட்டங்களை தனியார் காடுகள் என்று அரசு அறிவித்து உள்ளது. இதனால், பட்டா நிலங்களில் உள்ள மரங்களை கூட வெட்ட முடியவில்லை. சொந்த நிலத்தை விற்க முடியவில்லை. நாங்கள் இந்த பிரச்சினை தொடர்பாக முதல்–அமைச்சரிடம் எடுத்து கூறுவோம். ஒரு வாரத்தில் பதில் கிடைக்கவில்லை எனில் தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களையும், சென்னை தலைமைச்செயலகத்தையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் குலசேகரம் சென்ற போது, அங்கு மாவட்ட ரப்பர் விவசாயிகள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ரப்பர் விவசாயிகளுடன் அய்யாக்கண்ணு ஆலோசனை கூட்டம் நடத்தினார். நிகழ்ச்சியில், ரப்பர் விவசாயிகள் சங்க தலைவர் நெல்சன் பேசுகையில், தனியார் காடுகள் பாதுகாப்பு சட்டத்தினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். இதில் ரப்பர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story