சாத்தான்குளம் அருகே பரிதாபம் ஊஞ்சலில் விளையாடியபோது தூண் சாய்ந்து விழுந்து சிறுமி பலி


சாத்தான்குளம் அருகே பரிதாபம் ஊஞ்சலில் விளையாடியபோது தூண் சாய்ந்து விழுந்து சிறுமி பலி
x
தினத்தந்தி 4 March 2018 3:00 AM IST (Updated: 4 March 2018 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே ஊஞ்சலில் விளையாடியபோது, தூண் சாய்ந்து விழுந்து சிறுமி பலியானாள்.

சாத்தான்குளம்,

சாத்தான்குளம் அருகே ஊஞ்சலில் விளையாடியபோது, தூண் சாய்ந்து விழுந்து சிறுமி பலியானாள்.

4-ம் வகுப்பு மாணவி

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே புதுக்குளம் பஞ்சாயத்து வேலாயுதபுரம் கந்தன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜான்சன். கூலி தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 3 மகள்கள், ஒரு மகன். இளைய மகள் மெர்லின் (வயது 9), வேலாயுதபுரத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தாள். இவள் நேற்று முன்தினம் மாலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு திரும்பி வந்தாள்.

இவர்களது வீட்டின் முன்பு பந்தல் அமைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சுமார் 6 அடி உயர தூண் அமைக்கப்பட்டு இருந்தது. அதில் கயிறு கட்டி ஊஞ்சலாட மெர்லின் திட்டமிட்டாள். கயிற்றின் ஒரு முனையை அந்த தூணிலும், மற்றொரு முனையை அருகில் உள்ள மரத்திலும் கட்டி விட்டு, மெர்லின் ஊஞ்சலாடினாள். அப்போது அந்த தூணின் அஸ்திவாரம் ஆழமாக இல்லாததால், அது திடீரென்று சாய்ந்து மெர்லின் மீது விழுந்தது.

பரிதாப சாவு

இதில் உடைந்த தூணின் அடியில் சிக்கிக்கொண்ட மெர்லின் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தாள். அவளது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும், சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ரேனியஸ் ஜேசுபாதம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மெர்லினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஊஞ்சலில் விளையாடியபோது, தூண் சாய்ந்து விழுந்து சிறுமி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story