எட்டயபுரம் அருகே அடுத்தடுத்து விபத்து: பஸ்-மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் படுகாயம்


எட்டயபுரம் அருகே அடுத்தடுத்து விபத்து: பஸ்-மோட்டார் சைக்கிள்கள் மோதல்; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 March 2018 2:00 AM IST (Updated: 4 March 2018 12:28 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

எட்டயபுரம்,

எட்டயபுரம் அருகே பஸ்- மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

மோட்டார் சைக்கிள்கள் மோதல்


கோவில்பட்டி உசைன் நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் மாரி கண்ணன் (வயது 30). இவர் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் விளாத்திகுளத்தில் உள்ள தன்னுடைய நண்பர்களை பார்க்க சென்றார்.

பின்னர் அவர் இரவில் விளாத்திகுளத்தில் இருந்து கோவில்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி சென்று கொண்டிருந்தார். எட்டயபுரம் அருகே ராமனூத்து விலக்கு அருகில் சென்றபோது, முன்னால் சென்ற அரசு பஸ்சை மாரி கண்ணன் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே கோவில்பட்டி சண்முகசிகாமணி நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் தனியார் நிறுவன ஊழியரான பாபு (29) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது.

2 பேர் படுகாயம்

இந்த விபத்தில் மாரி கண்ணனின் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி அருகில் சென்ற பஸ்சின் முன்பக்கத்தில் விழுந்தது. இதனால் பஸ்சில் சிக்கிய மோட்டார் சைக்கிளுடன் மாரி கண்ணன் சிறிதுதூரம் தரதரவென்று சாலையில் இழுத்து செல்லப்பட்டார். இந்த விபத்தில் வலது கால் எலும்பு முறிவு ஏற்பட்ட மாரி கண்ணன் மற்றும் பாபு ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும், எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த மாரி கண்ணன், பாபு ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான விருதுநகர் மாவட்டம் பந்தல்குடியைச் சேர்ந்த சின்னதம்பியிடம் (56) விசாரித்து வருகின்றனர்.

Next Story