மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் தாயின் மடியில் இருந்த குழந்தை தவறி விழுந்து சாவு


மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால் தாயின் மடியில் இருந்த குழந்தை தவறி விழுந்து சாவு
x
தினத்தந்தி 4 March 2018 2:00 AM IST (Updated: 4 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால், தாயின் மடியில் இருந்த குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.

திசையன்விளை,

மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சேலை சிக்கியதால், தாயின் மடியில் இருந்த குழந்தை தவறி விழுந்து பரிதாபமாக இறந்தது.

6 மாத குழந்தை

இட்டமொழி அருகே உள்ள மேலபண்டாரபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி மகன் சரவணன் (வயது 25). இவர் இட்டமொழி பஜாரில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி முத்துலட்சுமி (21). இவர்களுக்கு முனிஷா என்ற 6 மாத பெண் குழந்தை இருந்தது.

இந்த நிலையில், சரவணன் நேற்று முன்தினம் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் காவல்கிணறு அருகே உள்ள முப்பந்தல் இசக்கியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு சாமி கும்பிட்டுவிட்டு அதே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்த முத்துலட்சுமி தனது மடியில் குழந்தை முனிஷாவை வைத்து இருந்தார்.

பரிதாப சாவு

வள்ளியூரை தாண்டி கோட்டைகருங்குளம் பகுதியில் வந்தபோது, திடீரென்று முத்துலட்சுமியின் சேலை மோட்டார் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக முத்துலட்சுமியின் மடியில் இருந்த குழந்தை முனிஷா கீழே விழுந்து காயம் அடைந்தது.

உடனே குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை முனிஷா பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story