உத்தமபாளைத்தில் கோவில் பராமரிப்பு பணியை தடுத்ததால் பெண்கள் தர்ணா போராட்டம்


உத்தமபாளைத்தில் கோவில் பராமரிப்பு பணியை தடுத்ததால் பெண்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 4 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

கோவில் பராமரிப்பு பணியை தடுத்ததால் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் உத்தமபாளையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

உத்தமபாளையம்,

உத்தமபாளையத்தை அடுத்துள்ள ராயப்பன்பட்டி வடக்கு தெருவில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இந்துமத அனைத்து சமுதாய மக்களும் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கோவில் பள்ளத்தில் இருப்பதால் அதனை உயர்த்தி கட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள பொதுமக்கள் முடிவு செய்தனர்.

இதனையடுத்து நேற்று இதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர். இதற்கு அந்த பகுதியில் உள்ள ஒருவர் கோவில் எனக்கு சொந்தமான இடத்தில் இருக்கிறது. பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள கூடாது என்று தடுத்துள்ளார். இதனை அடுத்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து கோவில் முன்பு பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் துணை தாசில்தார் சுருளி தலைமையில் வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பல ஆண்டுகளாக கோவிலை கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் தனிஒருவர் உரிமை செலுத்த முடியாது. எனவே சம்மந்தப்பட்டவர் நீதிமன்றத்தை நாடலாம். அதேநேரத்தில் கோவில் பராமரிப்பு பணிகள் செய்வதை தடுக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார்கள்.

இதனை இருதரப்பினர் களும் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story