ரேஷன் கடையில் புழுங்கல் அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


ரேஷன் கடையில் புழுங்கல் அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 March 2018 4:30 AM IST (Updated: 4 March 2018 1:14 AM IST)
t-max-icont-min-icon

நாகனூர் ரேஷன் கடையில் புழுங்கல் அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

தோகைமலை,

தோகைமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் கீழ் நாகனூரில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் நாகனூர், நாகனூர் காலனி, கலிங்கபட்டி, மேட்டுபட்டி, கிருஷ்ணம்பட்டி, வத்தப்பிள்ளையூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக அப்பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி மட்டும் வழங்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று ரேஷன் கடைக்கு பொதுமக்கள் அரிசி வாங்க சென்றனர். அப்போது பச்சரிசி வழங்குவதாக ரேஷன் கடை விற்பனையாளர் பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால் பொதுமக்கள் சென்ற மாதம் எங்களுக்கு பச்சரிசி வழங்கியதால் உடல் நலம் பாதிப்பு அடைந்தது. அதனால் இந்த மாதம் எங்களுக்கு புழுங்கல் அரிசி வழங்க வேண்டும் என்று கூறி விற்பனையாளரிடம் வாக்குவாதம் செய்தனர். அனைவருக்கும் புழுங்கல் அரிசி வழங்க போதுமான இருப்பு தற்போது ரேஷன் கடையில் இல்லை என்று விற்பனையாளர் கூறியதால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தங்களுக்கு புழுங்கல் அரிசி வழங்கக்கோரி தோகைமலை- பாளையம் சாலையில் நாகனூர் பஸ் நிறுத்தம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த குளித்தலை வட்ட வழங்கல் அலுவலர் பெருமாள், கூட்டுறவு சங்க செயலாளர் தங்கபாண்டியன், தோகைமலை வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் அண்ணாதுரை, கூட்டுறவு சங்கத்தின் உதவியாளர் சுந்தர், தோகைமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாகனூர் ரேஷன் கடைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள அரிசி அளவில் தற்போது பாதி அளவுதான் வந்துள்ளது. மீதி வந்தவுடன் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் புழுங்கல் அரிசி வழங்கப்படும். ரேஷன் கடையில் முறைகேடு நடந்தால் அதுதொடர்பாக பொதுமக்கள் புகார் அளித்தால் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் பொதுமக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் தோகைமலை- பாளையம் சாலையில் சுமார் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story