அவலாஞ்சி வனத்துறை ஓய்வு விடுதி அருகே புலி நடமாட்டம், சுற்றுலா பயணிகள் பீதி


அவலாஞ்சி வனத்துறை ஓய்வு விடுதி அருகே புலி நடமாட்டம், சுற்றுலா பயணிகள் பீதி
x
தினத்தந்தி 4 March 2018 2:45 AM IST (Updated: 4 March 2018 1:20 AM IST)
t-max-icont-min-icon

மஞ்சூர் அருகே அவலாஞ்சி வனத் துறை ஓய்வுவிடுதி அருகே புலி நடமாட்டம் உள்ளது. இதை பார்த்த சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர்.

மஞ்சூர்,

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அணைகள், நீர்மின் நிலையங்கள், பென்ஸ்டாக் காட்சிமுனை உள்பட பல்வேறு முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஊட்டியில் இருந்து மஞ்சூர் பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளை கண்டு களிக்க திருநெல்வேலியை சேர்ந்த சுற்றுலா பயணிகள் மாலை 4 மணியளவில் எமரால்டு, அவலாஞ்சி பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது, மாலை சுமார் 5.30 மணியளவில் அவலாஞ்சி வனத் துறைக்கு சொந்தமான ஓய்வு விடுதி அருகே சாலையோரத்தில் புலியின் நடமாட்டம் இருந்துள்ளது.

அந்த புலி சுற்றுலா பயணிகளின் வாகனம் வந்த போதும் அந்த இடத்தை விட்டு நகராமல் அதே இடத்தில் இருந்தது. இதை கண்ட சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். இதை அறிந்து வனத்துறை ஓய்வு விடுதியில் இருந்த வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், சுற்றுலா பயணிகளை அங்கிருந்து உடனடியாக செல்லுமாறு அறிவுறுத்தினர். உடனே அவர்களும் புறப்பட்டு சென்றனர். முன்னதாக அந்த சுற்றுலா பயணிகளில் சிலர் தங்களின் செல்போனில் புகைப்படம் எடுத்து உள்ளனர். இது சம்பந்தமாக வனத்துறை அதிகாரி கூறியதாவது:-

அவலாஞ்சி பகுதிகளில் சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் அதிகம் காணப்படுகின்றன. எனவே அவலாஞ்சி வனப் பகுதிகளுக்குள் வனத்துறை அனுமதியுடன் தான் சுற்றுலா வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சாலைகளில் வரும் வன விலங்குகளை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். வனவிலங்குகளின் அருகே சென்றால் ஆபத்து ஏற்படும் என்பதை சுற்றுலா பயணிகள் உணர வேண்டும். எனவே, சுற்றுலா பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்வதுடன், வனவிலங்குகளை தொந்தரவு செய்யக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story