வேலூர் மாவட்டத்தில் 5,653 பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க இலக்கு


வேலூர் மாவட்டத்தில் 5,653 பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க இலக்கு
x
தினத்தந்தி 4 March 2018 4:30 AM IST (Updated: 4 March 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் 5,653 பெண்களுக்கு இருசக்கர வாகனங்கள் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.

வேலூர்,

வேலூர் மாவட்ட மகளிர் திட்டத்தின் சார்பில் உழைக்கும் மகளிருக்கு தமிழக அரசின் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் விழா கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். மகளிர் திட்ட இயக்குனர் சிவராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபில் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:-

பெண்கள் தங்களது பணியிடங்களுக்கும் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தை மறைந்த முதல் - அமைச்சர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டு, பிரதமர் மோடியால் கடந்த மாதம் 24-ந் தேதி சென்னையில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சமுதாயத்தில் பெண்களுக்கு சம உரிமைகள் இருக்க வேண்டும் என்று எண்ணியவர் ஜெயலலிதா. அதனால் தன்னுடைய ஆட்சி காலத்தில் மகளிருக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். வேலூர் மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு இதுவரை ரூ.310 கோடி கடனுதவி வழங்கப்பட்டு, பெண்கள் யாரையும் சார்ந்து இல்லாமல் சுயமாக தங்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பெண் கல்வியை ஊக்குவிக்க படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கமும், திருமண உதவித்தொகையும், பள்ளி செல்லும் பெண்களுக்கு விலையில்லா சைக்கிள்களையும் ஜெயலலிதா வழங்கினார். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்ப பெண்கள் வேலைக்கு செல்கின்றனர். அப்பெண்களின் சுமையை குறைக்கவே விலையில்லா மிக்சி, கிரைண்டர் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டன.

அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கும் திட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் கிராம மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 5,653 உழைக்கும் மகளிருக்கு 2017-2018-ம் ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 1 லட்சம் பேருக்கு வழங்கப்பட உள்ளது. தற்போது முதற்கட்டமாக இன்று (நேற்று) 100 பேருக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. லோகநாதன், ஆவின் தலைவர் வேலழகன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story