சத்தம் இன்றி அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் மாணவர்கள், கிராம மக்கள் பாராட்டு


சத்தம் இன்றி அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் மாணவர்கள், கிராம மக்கள் பாராட்டு
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 4 March 2018 1:56 AM IST)
t-max-icont-min-icon

அரசு பள்ளிகளில் மாணவர்களை கவரம் வகையில் வண்ண ஓவியங்களை இளைஞர் அமைப்பினர் வரைந்து கொடுத்துள்ளனர்.

பாகூர்,

புதுச்சேரியில் மாணவர்களால் புதிதாக பெயிண்ட் பாண்டிச்சேரி என்ற இளைஞர் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படித்தவர்கள் மற்றும் மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் குழுவாக பிரிந்து புதுவை நகரம் மற்றும் கிராமப் புறத்தில் உள்ள அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் வகுப்பறைகளை சுத்தம் செய்கிறார்கள். அதோடு அங்குள்ள சுவர்களில் வண்ணம் தீட்டி குழந்தைகளுக்கு பிடித்தவாறு சித்திரங்கள், இயற்கை காட்சிகளை வரைந்து ‘பளிச்’ என வைத்துள்ளனர். அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்த அமைப்பினர் முதன் முதலில் புதுச்சேரி கடற்கரை சாலை போலீஸ் தலைமையகம் அருகே உள்ள அரசு சுவரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் வண்ண வண்ண ஓவியங்களை வரைந்து அழகுபடுத்தினர். இதற்கான செலவை அவர்களே பொறுப்பேற்று செய்து வருகின்றனர்.

இதுபோல் சுத்துக்கேணி அரசு தொடக்கப்பள்ளி, பாப்பாஞ்சாவடி அரசு தொடக்கப்பள்ளி, முத்தியால்பேட்டை வேதா மேல்நிலைப்பள்ளி, பாகூர்பேட் அரசு தொடக்கப்பள்ளி உள்பட பல்வேறு அரசு பள்ளிகளில் சுத்தம் செய்து சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுபடுத்தியுள்ளனர்.

பாகூர் அருகே சோரியங்குப்பம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் வகுப்பறைகளை சுத்தம் செய்து பள்ளி மாணவர்களை கவரும் வகையில் சுவர்களில் வண்ண ஓவியம் வரைந்துள்ளனர். அரசு பள்ளிகளில் சத்தமின்றி சுத்தம் செய்து சுற்றுப்புறத்தை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகளை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

இதுமட்டுமல்லாமல் 7 அரசு பள்ளிகளுக்கும் நோட்டு புத்தகம், நாற்காலி, கரும்பலகை மற்றும் தேவையான பொருட்களை இந்த அமைப்பினர் இலவசமாக வழங்கினர். புதுவையில் உள்ள அரசு பள்ளிகளில் வண்ண ஓவியங்கள் வரைய உள்ளதாகவும் இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.

Next Story