திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கு சுய தொழில் கடன் உதவி கலெக்டர் வழங்கினார்


திருவண்ணாமலையில் திருநங்கைகளுக்கு சுய தொழில் கடன் உதவி கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 4 March 2018 4:15 AM IST (Updated: 4 March 2018 1:58 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் நடந்த தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொண்ட திருநங்கைகளுக்கு சுய தொழில் கடன் உதவியை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழங்கினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளுக்கு தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் திருவண்ணாமலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தில் கடந்த 26-ந் தேதி தொடங்கி, 5 நாட்கள் நடைபெற்றது. இதில் திருநங்கைகள் கலந்துகொண்டனர். அவர்களுக்கு கைவினை பொருட்கள், வீட்டுமுறை உணவு வகைகள் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

அதைத் தொடர்ந்து, பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் சுய தொழில் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி, திருநங்கைகளுக்கு சுய தொழில் கடனுதவி, சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை வழங்கி பேசுகையில், ‘திருநங்கைகளுக்கு சுய தொழில் தொடங்க ரூ.20 ஆயிரம் கடனுதவி வழங்கப்படுகிறது. இதன் மூலம் எந்த மாதிரி தொழில் செய்தால் லாபம் அடையலாம் என்பதை தெரிந்து அதில் முதலீடு செய்ய வேண்டும். சுய தொழில் செய்து லாபம் பெறுவதோடு தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். மேலும், மாவட்ட சமூக நலத்துறை சார்பில், திருநங்கைகளுக்கு வழங்கப்படும் திட்டங்களின் பயனை முழுமையாக பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்’ என்றார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ஜானகி, மாவட்ட சமூக நல அலுவலர் கிறிஸ்டினா டார்த்தி, மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் கவிதா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story