இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: சட்டக்கல்லூரி மாணவர்கள் 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம்
கல்லூரி இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, 6-வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை,
சென்னை பாரிமுனையில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த 26-ந்தேதி முதல் கல்லூரி வளாகத்தில் சட்டக்கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 1-ந்தேதி சட்டக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி சுவரில் ஏறி கீழே குதிக்கப்போவதாக கூறி பரபரப்பு ஏற்படுத்தினர். நேற்று வாயில் கருப்பு துணி கட்டியும், முகத்தில் படம் வரைந்தும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சட்டத்துறை அமைச்சரோ, செயலாளரோ நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தாதவரை, தங்களது போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்று சட்டக்கல்லூரி மாணவர்கள் உறுதியாக உள்ளனர்.
வேல்முருகன் ஆதரவு
இந்தநிலையில் 6-வது நாளாக நேற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தங்களது உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். நேற்று காலை தமிழக வாழ்வுரிமை கட்சி வேல்முருகன் சட்டக்கல்லூரி வளாகத்துக்கு வந்தார். அவருடன் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் சத்ரியன் து.வெ.வேணுகோபால் உள்பட நிர்வாகிகளும் வந்தனர். சட்டக்கல்லூரி மாணவ -மாணவிகளை சந்தித்த வேல்முருகன், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், போராட்டத்துக்கு ஆதரவும் அளித்தார்.
மாணவர்கள் மத்திய வேல்முருகன் பேசியதாவது:-
குரலை ஒடுக்க முயற்சி
அனைத்து சமூக பிரச்சினைகளிலும் சட்டக்கல்லூரி மாணவர்கள் முன்வந்து, வகுப்புகளை புறக்கணித்து வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள். நியாயமான போராட்டங்களின் தாய்பூமி, இந்த சட்டக்கல்லூரி. எனவே உங்கள் குரலை ஒடுக்கி, உங்களை அடக்கவே சட்டக்கல்லூரி இடமாற்றத்துக்கு முயற்சி நடக்கிறது. இதன்மூலம் போராட்டத்தை தவிர்க்கலாம் என்று நினைக்கிறார்கள். இடவசதி என்று கூறி இடமாற்றம் செய்வதை ஏற்கமுடியாது. இதுகுறித்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு போராட்டத்தை நிச்சயம் முன்னெடுக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story