நதிகள் பாதுகாப்பு குறித்து மனைவியின் வீடியோ விவகாரம்: முதல்-மந்திரி பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்


நதிகள் பாதுகாப்பு குறித்து மனைவியின் வீடியோ விவகாரம்: முதல்-மந்திரி பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 March 2018 3:45 AM IST (Updated: 4 March 2018 3:43 AM IST)
t-max-icont-min-icon

நதிகள் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்ட வீடியோ சர்ச்சையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி உள்ளது.

மும்பை,

நதிகள் பாதுகாப்பு குறித்து வெளியிடப்பட்ட வீடியோ சர்ச்சையில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் கட்சி வற்புறுத்தி உள்ளது.

வீடியோ வெளியீடு

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசின் மனைவி அம்ருதா மற்றும் பாடகர் சோனு நிகம் ஆகியோர் நதிகள் பாதுகாப்பு குறித்து பாடிய விழிப்புணர்வு பாடல் அடங்கிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

தனியார் அமைப்பு சார்பில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த வீடியோ காட்சியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், அம்ருதா, நிதி மந்திரி சுதீர் முங்கண்டிவார் மற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.

இந்த வீடியோ காட்சி எடுக்கப்பட்டதில் முதல்-மந்திரி அலுவலகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் தவறாக பயன்படுத்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்த நிலையில் மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சச்சின் சாவந்த் கூறியதாவது:-

பதவி விலக வேண்டும்

முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலில், அரசு அதிகாரிகள் தனியார் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நதிகள் பாதுகாப்பு குறித்த பாடல் பதிவிற்காக வரவழைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்படியானால் தனியார் அமைப்பினர் அதிகாரிகளின் அனுமதியின்றி அவர்களை தங்கள் பாடல் பதிவில் இடம் பெற செய்ததை அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததா? அது உண்மை என்றால் சேவை விதிமுறைகளை மீறிய அரசு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

விதிமுறை மீறல்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தார்மீக பொறுப்பேற்று அவர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே ஆம்-ஆத்மி கட்சியினரும் இந்த வீடியோ குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.

Next Story