பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை


பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
x
தினத்தந்தி 4 March 2018 3:30 AM IST (Updated: 4 March 2018 4:05 AM IST)
t-max-icont-min-icon

பயிர் காப்பீட்டு தொகை வழங்கக்கோரி குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 25 பெண்கள் உள்பட 100 விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.

காட்டுமன்னார்கோவில்,

காவிரி டெல்டாவின் கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில், குமராட்சி பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு பாசனத்திற்கு தண்ணீர் இல்லாததால் நெற்சாகுபடி செய்த விவசாயிகள் அதிகளவில் பாதிப்படைந்தனர். இருப்பினும், வேளாண் அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் விவசாயிகள் பலர், தாங்கள் சாகுபடி செய்த பயிர்களுக்கு காப்பீடு செய்திருந்தனர்.

விவசாய பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை வழங்கவில்லை. மேலும், இதுசம்பந்தமாக கணக்கெடுப்பு நடத்தப்படாமல் பெயரளவிற்கு மட்டுமே காப்பீட்டு தொகை வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் காப்பீட்டு தொகை வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் குமராட்சி பகுதியில் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீட்டு தொகை வழங்காததை கண்டித்து குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை கீழணை பாசன விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமையில் விவசாயிகள் பலர் முற்றுகையிட்டனர். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள் கென்னடி, அன்பழகன், லட்சுமிகாந்தன், செல்வகுமார், மணிவண்ணன், பாலசுந்தரம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடந்த 2016-17-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை உடனே வழங்க வேண்டும், கடந்த ஆண்டு பயிர் சாகுபடி செய்ய காலம் தாழ்த்தி தண்ணீர் திறந்ததாலும், தொடர் மழை பெய்ததாலும், நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்த பயிர்கள் பாதிக்கப்பட்டது. இந்த பகுதிகளை வேளாண்மை துறை சார்பில் இதுவரை கணக்கீடு பணி தொடங்காததை கண்டிப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து குமராட்சி வேளாண்மை உதவி இயக்குனர் வேல்விழி, சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், தாசில்தார் சிவகாமசுந்தரி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 1 மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 25 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுகுறித்து விவசாய சங்க தலைவர் விநாயகமூர்த்தி கூறுகையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் அதிகாரிகள் கணக்கீடு செய்து, அரசுக்கு தெரிவித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. மேலும் காப்பீடு செய்தவர்களுக்கும் சரியான முறையில் காப்பீடு வழங்கவில்லை. இது குறித்து தொடர்ந்து போராடி வருகிறோம். இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கவில்லை எனில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியின் காப்பீடு அலுவலகத்தை முற்றுகையிட்டு தொடர் போராட்டம் நடத்துவோம் என்றார்.

Next Story