கடலுக்கு அடியில் செல்லும் ‘கப்பலின் நண்பன்’


கடலுக்கு அடியில் செல்லும் ‘கப்பலின் நண்பன்’
x
தினத்தந்தி 4 March 2018 1:59 PM IST (Updated: 4 March 2018 1:59 PM IST)
t-max-icont-min-icon

50 வயதிலும் ஆழ்கடலுக்குள் மூழ்கி, ஆச்சரியப்பட வைக்கிறார் கோவிந்தசாமி.

 ‘ஸ்கூபா டைவிங்’ முறையில் ஆழ்கடலுக்குள் சென்று, அங்கு புதைந்திருக்கும் ஆச்சரியங்களை ரசித்து பார்க்கும் பார்வையாளர் ரகத்தை சேர்ந்தவர் அல்ல இவர். கடலுக்குள் மூழ்கிச் சென்று கண்களுக்கு முழுமையாக புலப்படாத பகுதிகளில் அமைந்திருக்கும், கடல் நீரை தூய்மையாக்கும் சுத்திகரிப்பு நிலைய கருவிகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். கப்பல்களுக்கு அடியில் சென்றும் புனரமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். கடலுக்குள் ஹெலிகாப்டர் விழுந்தால் அதில் இருப்பவர்களை மீட்பது எப்படி? என்பது பற்றிய பயிற்சியும் பெற்றிருக்கிறார்.

இவருடைய ஆழ்கடல் அனுபவங்கள் சுவாரசியமான, சோகமான சம்பவ பின்னணிகளை கொண்டிருக்கின்றன. குளங்கள், ஏரிகள் போன்ற நீர்நிலைகளின் கட்டமைப்புகள் பற்றியும் அறிந்து வைத்திருக்கிறார். நீர்நிலைகளுக்குள் சென்று போராடி உடல்களை மீட்கும் சேவையையும் செய்து வருகிறார். கோவிந்தசாமி சென்னையை அடுத்த மாதவரத்தை சேர்ந்தவர். அனுபவத்தின் வாயிலாகவும், பயிற்சிகள் மூலமும் ஆழ்கடல் பகுதிகளை சர்வ சாதாரணமாக கையாளுகிறார்.

நீர் நிலைகளுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் கோவிந்தசாமி அவருடைய கடல் பயண அனுபவங்களை சொல்ல கேட்போம்!

‘‘நான் 10-ம் வகுப்பு படித்து முடித்ததும் குடும்ப சூழ்நிலையால் வேலைக்கு செல்ல தொடங்கினேன். அப்போது சென்னை துறைமுகத்தையொட்டிய கடல் பரப்புகளில் கற்களைக்கொட்டி கடல் அரிப்பை தடுக்கும் பணி நடந்தது. லாரியில் இருந்து கற்களை கடலுக்குள் கொட்டியதும் அவை நீருக்குள் சமமாக பரப்பப்பட்டிருக்கிறதா? என்பதை கடலுக்குள் மூழ்கி பார்க்கும் பணியில் ஈடுபட்டேன். கடலுக்குள் மூழ்கிச் சென்று மேடு, பள்ளமாக கிடக்கும் கற்களை சமப்படுத்தும் பணி எனக்கு பிடித்துப் போனது. மூழ்குவதும், மேலே நீந்தி வருவதும் ஜாலியாக இருந்தது. வெளி உலகத்தை விட அமைதியாக காட்சியளிக்கும் ஆழ்கடல் பரப்புகளுக்குள் சென்று வருவதை பொழுதுபோக்காகவே மாற்றிக்கொண்டேன். ஸ்கூபா டைவிங் போன்று கடலுக்கடியில் மூழ்கி செல்லும் பயிற்சியையும் முறைப்படி கற்க தொடங்கினேன்’’ என்பவர், பின்பு கப்பல்களின் அடிப் பகுதிகளை பராமரிக்கும் பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

‘‘கப்பலுக்கு அடியில் 15 வகையான பாகங்கள் இருக்கின்றன. கடல் நீரால் கப்பலின் உள்பகுதியிலும், வெளிப்பரப்புகளிலும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். கப்பலின் சுற்றுப்புற பகுதிகளில் சிப்பிகள் அமர்ந்து அதனையே புகலிடமாக மாற்றிவிடும். பவளபாறைகளில் மோதியும் கப்பல் சேதமடையும். மீன் வலைகளும் மாட்டிக்கொண்டிருக்கும். இப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்பட்டால், கப்பலால் வேகமாக செல்ல இயலாது. அதுமட்டுமின்றி கடல் நீரில் மூழ்கியிருக்கும் கப்பலின் பாகங்களை அடிக்கடி பராமரிக்கவும் வேண்டும். இல்லாவிட்டால் கப்பலின் ஆயுள் குறைந்துவிடும். கப்பலின் அடியில் படிந்திருக்கும் சிப்பிகள் மற்றும் சிக்கும் வலைகளை நீக்கும் பணியில் முதலில் ஈடுபட தொடங்கினேன். ஒருமுறை டைட்டானிக் கப்பலில் நடந்த சம்பவம்போன்று ஒரு கப்பலின் உள் பகுதியில் நீர் கசியத்தொடங்கியது. எந்த பகுதியில் இருந்து நீர் உள்ளே நுழைகிறது என்பதை கண்டுபிடிக்கும் முன்பு அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கிவிட்டது. நான் கப்பலின் அடிப்பகுதிக்கு சென்று அனைத்து வால்வுகளையும் சரிபார்த்து நீர் கசிவு எங்கிருந்து உருவாகிறது என்பதை கண்டுபிடித்து சொன்னேன். அது மிகவும் சிரமமான பணியாக இருந்தது’’ என்கிறார்.

ஆழ்கடலுக்குள் கோவிந்தசாமிக்கு நண்பர்களும் கிடைத்திருக்கிறார்கள். களவான் என்ற மீன் இனம் அவருடன் நெருங்கி பழகிக்கொண்டிருக்கிறது. கடலுக்குள் செல்லும்போதெல்லாம் அது தன்னுடைய வரவை எதிர்பார்த்து காத்திருக்கும் என்று மனம் நெகிழ்கிறார்.

‘‘கப்பலின் அடிப்பகுதிகள், பாறை இடுக்குகள், கடலுக்குள் மோதி நொறுங்கிக் கிடக்கும் படகுகள் போன்றவைகளின் உள்பகுதிகளில்தான் பெரிய களவான் மீன் இனங்கள் வசிக்கும். ஆரம்பத்தில் ஒரே ஒரு மீன் மட்டும் என் கண்களில் தென்பட்டது. அது என்னை பார்த்து பயந்து விலகி ஓடியது. நானும் அதைப்பார்த்து பயந்தேன். பின்பு அதனை அடிக்கடி பார்க்க நேர்ந்ததால் அது என்னை பார்த்ததும் நெருங்கிவர தொடங்கியது. சில சமயங்களில் எனக்கு குறுக்கே வந்து நின்று என்னை அங்கும், இங்கும் நகர விடாது. அந்த அளவுக்கு அது என் மீது நேசம் காட்டத்தொடங்கிவிட்டது. நான் அதனை கைகளால் அரவணைத்து தள்ளிவிடுவேன். ஒருமுறை அதன் துணையுடன் ஒன்றாக சேர்ந்து வந்தது. இரு மீன்களை பார்த்ததும் பதற்றமடைந்துவிட்டேன். அதனை வெளிக்காட்டாமல் விலகிச் சென்றேன். ஓரிரு மாதங்கள் என் கண்களில் அந்த மீன்கள் தென்படவே இல்லை.



கடலுக்குள் செல்லும்போதெல்லாம் அந்த மீனை காணவில்லையே என்று தேடுவேன். ஒரு நாள் எதிர்பாராத விதமாக அந்த மீன் தன்னுடைய குஞ்சுகளுடன் நீந்தி வந்தது. அதை பார்த்து ஆச்சரியப்பட்டு போனேன். தன்னுடைய மீன் குஞ்சுகளை என்னிடம் காண்பிப்பதற்காக சில நிமிடங்கள் என் அருகில் வந்து நின்றுவிட்டு திரும்பிச் சென்றது. அது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். எந்த மீன்களை பார்த்தாலும் நம் பயத்தை உடலளவில் வெளிப்படுத்தக்கூடாது. அது தவறாக புரிந்து கொண்டு தம்மை தாக்க வருவதாக நினைத்துவிடும். சலனமின்றி அதனை ரசித்தால் அதுவும் நம்மை நாடிவர தொடங்கிவிடும்’’ என்கிறார்.

ஸ்கூபா டைவிங் மூலம் நீந்துவதற்கும், ஆழ்கடல் பரப்புக்குள் பயிற்சி பெற்றவர்கள் செல்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்று கோவிந்தசாமியிடம் கேட்டோம்.

‘‘கடலுக்குள் நீந்துவதற்கு மூக்கு, காது இரண்டும் சவுகரியமாக இயங்க வேண்டும். மூக்கு சுவாச பிரச்சினைக்குள்ளாகும். காதுகள் அடைத்துக்கொள்ளும். அவைகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும் உபகரணங்களுடன் கடலுக்குள் நீந்த பயிற்சி பெறவேண்டும். பவளபாறைகளை காண்பதற்கும், கடல்வாழ் உயிரினங்களை ரசிப்பதற்கும் ஸ்கூபா டைவிங் முறையில் நீந்தி செல்லலாம். பெரும்பாலும் கடலுக்குள் வெளிச்சம் தென்படும் பகுதி வரையே நீந்துவது சவுகரியமாக இருக்கும். 10 அடி ஆழத்திற்கு கீழே சென்றால் வெளிச்சம் குறையத்தொடங்கிவிடும். ஆழமான பகுதிகளுக்குள் செல்லச் செல்ல கடல் அழுத்தம் அதிகரிக்க தொடங்கிவிடும். அது நம்மையும் அழுத்துவதால் சிரமத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பிரத்யேகமான உபகரணங்களை கொண்டு சென்றாலும் அதிகபட்சமாக 150 அடி ஆழம் வரை செல்வதற்கு மட்டுமே அனுமதி உண்டு. அதுவே சவாலான காரியம்தான்.

கரையில் இருந்துபார்க்கும்போதுதான் கடல் அமைதியாக காட்சியளிப்பது போல் தெரியும். சில சமயங்களில் கடலின் உள் பகுதியில் ஆற்று நீர் போல நீரோட்டம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கும். அப்போது எதிர் நீச்சல் அடிப்பதோ, அதனை கடந்து ஆழமான பகுதிக்கு செல்வதோ இயலாத விஷயமாகிவிடும். கடலின் சீதோஷ்ண நிலைக்கேற்ப உள்பகுதியில் மாற்றங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். அதை உணர்ந்து பாதுகாப்பாக ஆழ்கடலுக்குள் பயணிக்க வேண்டும்.

நான் மேற்கொள்ளும் கடல்நீரை தூய்மையாக்கும் சுத்திகரிப்பு திட்டத்துக்கான பணியும் சற்று சிரமமானதுதான். திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூர் அருகே காட்டுப்புலி கிராமத்தில் அமைந்திருக்கும் கடல் நீரை சுத்திகரிக்கும் திட்டத்திற்கான குழாய்கள் கடல் பரப்புக்குள் அமைந்திருக்கின்றன. அதிலிருக்கும் வால்வுகளில் அடைப்புகள் ஏற்படும். சில சமயங்களில் உயிரோடும், இறந்த நிலையிலும் மீன்கள் உள்ளே நுழைந்து அடைப்பை ஏற்படுத்திவிடும். சிப்பிகள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் மீன் வலைகளும் சிக்கிக்கொள்ளும். அவைகளை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகிறேன். என்னுடைய எல்லா பணிகளிலும் பிரபு, ஜெகன் ஆகிய இருவரும் உதவிகரமாக இருக்கிறார்கள்’’ என்பவர், கடலுக்கடியில் நடக்கும் சினிமா படப்பிடிப்புகளுக்கும் உதவி இருக்கிறார். ஆழ்கடல் பகுதிகளுக்குள் காட்சிகளை படமாக்கும் கேமிராக்களை கையாள்வதற்கும் பயிற்சி பெற்றிருக்கிறார். சில தமிழ்படங்களில் கடலுக்கடியில் நடக்கும் காட்சிகள் இடம்பெற்றதில் இவருடைய கைவண்ணமும் வெளிப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரெயிலுக்கான தூண்கள் அமைக்கும் பணியிலும் தன்னை இணைத்திருக்கிறார்.



‘‘மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக பூமிக்கு அடியில் 70 அடி ஆழத்துக்கு தூண்கள் அமைக்கப்படுகிறது. அந்த பணியில் ஈடுபடும் எந்திரங்கள் பூமிக்குள் துளை போடும்போது உள்ளிருக்கும் சேறுக்குள் சிக்கிக்கொள்ளும். நான் அந்த துளைகள் வழியாக 35 அடி ஆழம் வரை உள்ளே சென்று கயிறு கொண்டு சிக்கிய பாகங்களில் அதனை கட்டிவிட்டு வந்திருக்கிறேன். பின்னர் எளிதாக சிக்கிய பாகத்தை வெளியே எடுத்துவிடுவார்கள். நீர் நிலைகளில் இருக்கும் ஷட்டர்களை பராமரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருக்கிறேன். நீரில் மூழ்கி பாறை இடுக்குகள், சேறுகளில் சிக்கி மீட்க முடியாத நிலையில் இறந்து போனவர்களின் உடல்களையும் போராடி மீட்டு இருக்கிறேன். திரிசூலம் கல்குவாரியில் 60 அடி ஆழமுள்ள நீரில் விழுந்த லாரிக்குள் சிக்கிய கிளீனரின் உடலையும், 2015-ம் ஆண்டு பெய்த பேய்மழையில் சுரங்கப்பாதையில் தேங்கிய நீரில் மூழ்கி இறந்த 2 பேரின் உடல்களையும் மீட்டது கடினமான காரியமாக இருந்தது’’ என்கிறார்.

ஆழ்கடலுக்குள் 100 அடி ஆழத்திற்கு மேல் பயணிக்கும் கோவிந்தசாமி, 10 அடி ஆழத்திற்குள் இருக்கும் கழிவு நீர், குடிநீர் தொட்டிக்குள் இறங்குபவர்கள் இறக்கும் சம்பவம் வேதனை தருவதாக கூறுகிறார்.

‘‘கழிவுநீர், குடிநீர் தொட்டிக்குள் இறங்கி பணி செய்யும் தொழிலாளர்கள் விஷ வாயு தாக்கி இறந்து போவதற்கு பாதுகாப்பு விஷயத்தில் கவனம் செலுத்தாததே காரணம். அந்த தொட்டிகள் முழுவதும் அனைத்து வகையான வாயுக்களும் நிரம்பி இருக்கும். அவை வெளியே செல்வதற்கு வழியில்லாமல் அழுத்தமான சூழ்நிலையில் கலந்திருக்கும். உள்ளே இறங்குபவர்கள் சுவாசிப்பதற்கு போதுமான ஆக்சிஜன் அங்கு குறைந்து, மற்ற வாயுக்கள் சுவாசத்தில் கலக்க தொடங்கிவிடும். அதனை முகர்வதால் சுவாசத்திற்கு இடையூறு ஏற்பட்டு மயக்கநிலை உண்டாகும். பயத்தில் உடலும் நடுங்க தொடங்கிவிடும். இறுதியில் மயங்கி விழுந்துவிடுகிறார்கள். அவர்களை தூக்குவதற்கு உள்ளே செல்பவர்களுக்கும் அதே பாதிப்பு உருவாகி உயிரிழப்பை ஏற்படுத்திவிடுகிறது. எங்கு இருந்தாலும் முகத்திற்கும், சுவாசத்திற்கும் காற்று கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும். நான் ஆழ்கடலுக்குள் செல்லும்போது பயன்படுத்துவது போல முகத்தை முழுவதுமாக மூடும் ‘பேஷ் மாஸ்க்’ கருவியை பயன்படுத்தி தொட்டிகளுக்குள் பாதுகாப்பாக இறங்கலாம். வாகனங்களுக்கு காற்று அடைப்பதற்கு பயன்படுத்தப்படும் கம்ப்ரசர் கருவியில் காற்றை சுத்தப்படுத்தும் பில்டரை நிறுவி, சுவாசத்திற்கு தேவையான காற்றை டியூப் மூலம் பேஷ் மாஸ்க் கருவியில் இணைத்துவிடலாம். அதன் மூலம் தொட்டிக்குள் இறங்கி சுத்தம் செய்பவர்களுக்கு சுவாசத்திற்கு தேவையான காற்று கிடைத்துக்கொண்டே இருக்கும். 10 மணி நேரம் ஆனாலும் உள்ளேயே இருக்கலாம். எந்த பிரச்சினையும் ஏற்படாது. அந்த கருவியில் சிறிய அளவில் மைக் பொருத்தினால் வெளியே இருப்பவர்களுடன் பேசிக்கொண்டே தொடர்பில் இணைந்திருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று பேர் கூட சேர்ந்து இந்த பணியை செய்யலாம். அடுக்குமாடி கட்டிடங்கள், ஓட்டல்களில் இத்தகைய வழிமுறையை பயன்படுத்தி குடிநீர், கழிவு நீர் தொட்டிகளை சுத்தம் செய்ய தொடங்கினால் ஒருபோதும் உயிரிழப்பு ஏற்படாது’’ என்கிறார்.

கோவிந்தசாமியின் மனைவி பத்மாவதி. இவர்களுடைய மகன் கோகுலவாணன் மெக்கானிக்கல் என்ஜினீயராக இருக்கிறார். மகள் நிவேதாவுக்கு திருமணமாகிவிட்டது.

Next Story