பாம்புகளுக்காக வாழும் பாசமுள்ள பெண்மணி 875 பாம்புகளை பிடித்து பாதுகாத்துள்ளார்


பாம்புகளுக்காக வாழும் பாசமுள்ள பெண்மணி 875 பாம்புகளை பிடித்து பாதுகாத்துள்ளார்
x
தினத்தந்தி 4 March 2018 2:08 PM IST (Updated: 4 March 2018 2:08 PM IST)
t-max-icont-min-icon

வித்யா பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஆசிரியை பயிற்சிக் கல்வியும் பயின்றிருக்கிறார்

வித்யா பொருளாதாரத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். ஆசிரியை பயிற்சிக் கல்வியும் பயின்றிருக்கிறார். பத்து வருடங்களாக பள்ளியில் ஆசிரியையாகவும் வேலை பார்த்துள்ளார். கணவர் ராஜூ ராணுவ அதிகாரியாக இருந்ததால், பணிக்காக அவர் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போதெல்லாம் வித்யாவும் உடன் செல்லவேண்டியதிருந்ததால், தனது ஆசிரியை பணியை கைவிட்டவர், பாம்புகளை பாதுகாப்பதை தனது முழுநேர சேவையாக்கிக் கொண்டிருக்கிறார்.

பாம்புகளை பார்த்தாலே இவர் முகத்தில் புன்னகை வந்துவிடுகிறது. அதன் முட்டைகளையோ, குஞ்சு களையோ பார்த்துவிட்டால் எல்லையற்ற மகிழ்ச்சி கொள்கிறார்.

“என் கணவர் வேலைபார்த்த கடற்படை அலுவலகத்தில் இருந்து ஒருநாள் திடீரென்று எனக்கு அழைப்பு வந்தது. நானும் உடனே சென்று அங்கிருந்த விஷப் பாம்பு ஒன்றை பிடித்தேன். அதை வன இலாகாவை சேர்ந்தவர்களிடம் பாதுகாப்பாக வழங்கிவிட்டு அந்த இடத்தை ஆராய்ந்தபோது அங்கே 21 பாம்பு முட்டைகள் இருந்ததை கண்டேன். அவை அனைத்தும் பொரித்தால் அந்த பகுதி முழுக்க பாம்புக் குஞ்சு களாகிவிடும். நான் ஒவ்வொரு முட்டையாக எடுத்து பெட்டியில் அடுக்கிக்கொண்டிருந்தபோது, ஒரு முட்டை என் கையிலே பொரித்து, அதன் உள்ளே இருந்து குஞ்சு வெளியே வந்தது. என் உள்ளங்கையில் தவழ்ந்து ஒரு ஜீவன் வெளிவந்தது எனக்கு விவரிக்க முடியாத மகிழ்ச்சியை தந்தது. என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் அது..” என்கிறார், வித்யா.

இவர் எல்லா உயிரினங்களையும் நேசிக்கிறார். இவரது வீட்டில் பூனைகளும் வசிக்கின்றன. அவைகளுடனும் செல்லமாக கொஞ்சுகிறார்.

“சிறுவயதில் அப்பா எங்களை எல்லாம் அழைத்துக்கொண்டு மலையேற்றம் செல்வார். அப்போதே நான் இயற்கையை நேசிக்கத் தொடங்கிவிட்டேன். பறவைகளின் கீச்.. கீச்.. ஒலியும், மரங்களின் பசுமையும் என்னை கட்டிப்போட்டுவிடும். அங்கு பறவைகளோ, பிராணிகளோ காயமடைந்து கிடந்தால் என் தந்தை அவற்றை தூக்கிவந்து, மருந்திட்டு பராமரித்து காப்பாற்றுவார். எனது தாயாரும் மிகுந்த கருணைகொண்டவர். எங்களுக்கு உணவளிப்பதுபோன்று தினமும் கிளிகளுக்கும் உணவளிப்பார். நான் விலங்கியலை பாடமாக எடுத்து படிக்கத்தான் ஆசைப்பட்டேன். ஆனால் வங்கியில் வேலை கிடைக்கும் என்பதற்காக பொருளாதாரம் படிக்கச்சொன்னார்கள். அதை படித்தாலும் எப்படியோ நான் விரும்பியதுபோல் பாம்புகளை பாதுகாக்கும் சேவைக்கு வந்துவிட்டேன்” என்று புன்னகைக் கிறார், வித்யா.

முதன் முதலாவதாக இவர் பாம்பு பிடித்த கதையை விவரிக்கிறார்..

“திருமணமான புதிதிலே இயற்கை மீது நான் வைத்திருக்கும் காதலை என் கணவர் ராஜூ புரிந்துகொண்டார். ஒருமுறை அவருக்கு கோவாவுக்கு இடமாற்றம் ஏற்பட்டது. நானும் அங்கே சென்றேன். கடற்படை சார்ந்த அலுவ லகங்கள் பொதுவாகவே நகரத்தைவிட்டு வெகு தொலைவில் இருக்கும். ஒரு நதிக்கரை ஓரத்தில் எங்கள் வசிப்பிடம் இயற்கையோடு இணைந்து இருந்தது. அங்கு ஒருவருடைய கேரேஜில் ஒரு பாம்பு புகுந்திருந்தது. அந்த பாம்பை பார்த்து எல்லோரும் பயந்தனர். நான் பயப்படவில்லை. அதை பிடித்தேன். அதற்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாதே என்ற கவலையோடு, அதனை பாதுகாத்தேன். வன இலாகாவை சேர்ந்தவர்கள் வந்த பின்பு அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நிம்மதியடைந்தேன். அன்று முதல் இன்று வரை 875 பாம்புகளை பிடித்து பாதுகாப்பாய் காட்டில் விட்டுள்ளேன். அதில் ராஜநாகம் போன்ற கொடிய விஷமுள்ள பாம்புகளும் உண்டு..” என்கிறார்.

பாம்புகளை பற்றிய இவரது கருத்து வித்தியாசமானதாக இருக்கிறது.

“பாம்புகள் யாருக்கு தொந்தரவு தராத உயிரினம். அதற்கு பயம் வந்தால்தான் தன்னை பாதுகாப்பதற்காக கொத்தும். பாம்பு பிடிக்க செல்லும்போது முதலில் அதற்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தவேண்டும். பாம்பினை பார்த்துவிட்டால் நிறைய பேர் கம்பு, தடிகளுடன் கூடிவிடுவார்கள். அவர்கள் கூச்சல் எழுப்புவதோடு, தரையில் அந்த கம்புகளால் தட்டிக்கொண்டும் இருப்பார்கள். அந்த அதிர்வில் பாம்பு பயந்துவிடும். நான் முதலில் அவர்களை எல்லாம் அப்புறப்படுத்திவிட்டுதான் அதனை பிடிப்பேன். பாம்பை பார்த்த உடனே அது விஷம் உள்ளதா? சாதாரணமானதா? என்பது தெரிந்து விடும். விஷமற்றது என்று தெரிந்தால், ‘நீ வந்த வழிக்கு போய்விடு’ என்பேன். அதுவும் கடந்து போய்விடும். விஷமுள்ள பாம்பு என்றால் அதை பிடித்து கோணியில் கட்டி, வன இலாகாவினரிடம் ஒப்படைத்துவிடுவேன்” என்கிறார்.

இவர் தனது பாம்பு பிடிக்கும் அனுபவங்களை மிக எளிதாக சொல்லிவிட்டாலும், ஒவ்வொரு பாம்பை பிடிக்கும்போதும் ஒவ்வொரு விதத்தில் சிரமங்களை அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறார். சில நேரங்களில் பாம்புகளை பிடித்துவைத்துக்கொண்டு வன இலாகாவிற்கு தகவல் கொடுப்பார். அவர்கள் உடனே வருவதில்லை. தாமதமானால் அவர்கள் வரும் வரை போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பாராம். ஒருசில முறை போலீஸ் நிலையத்தினர் அதை ஏற்றுக்கொள்ளாதபோது, தனது வீட்டிலே அந்த பாம்பை பாதுகாப்பாக வைத் திருப்பாராம். அப்போது வீட்டில் உள்ளவர்கள் பயந்துவிடக் கூடாது என்பதற்காக, பாம்பு வீட்டில் இருக்கும் தகவலையும் சொல்லமாட்டாராம்.

ஒருமுறை இவர் நல்ல பாம்பை பிடித்தபோது அது பயந்துபோய் இவரை கொத்தியிருக்கிறது. இவரது கையை பலமாக சுற்றிக்கொண்ட அது 20 கிலோ வரை எடைகொண்டது என்கிறார். அப்போது எந்தவித ஆபத்தும் ஏற்படவில்லை என்றாலும், இப்போது மிக கவனமாகவே பாம்பு பிடிக்கிறார். இவரது உறவினர்கள் எல்லோரும் விசாகபட்டினத்தில் வசிக்கிறார்கள். இவர் தனது குடும்பத்தோடு கேரளாவில் வசிக்கிறார். பாம்பு பிடிப்பதோடு, வேறு பல சமூக சேவைகளும் செய்து வருகிறார். வீட்டுக்குள் புகுந்த பாம்புகளை பிடிக்கும்போது அந்த வீட்டில் உள்ளவர்கள் பணம் கொடுத்தாலும் இவர் வாங்குவதில்லை. “எல்லா உயிரினங்களும் இறைவனின் படைப்புகள். அவைகளுக்குரிய மரியாதையை நாம் கட்டாயம் வழங்கவேண்டும்” என்று நிறைவாக சொல்கிறார், இந்த பாம்பு பெண்.

Next Story