குடியிருப்பு பகுதியில் குப்பைகளை எரிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்


குடியிருப்பு பகுதியில் குப்பைகளை எரிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 5 March 2018 4:00 AM IST (Updated: 5 March 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

சேலையூர் கேம்ப்ரோடு பகுதியில், குடியிருப்பு பகுதியில் குப்பைகளை எரிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுபற்றி நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

தாம்பரம்,

சென்னையை அடுத்த தாம்பரம் நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளது. இதில் மேற்கு தாம்பரம் பகுதியில் நகராட்சி துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை அகற்றி வருகின்றனர். கிழக்கு தாம்பரம் பகுதியில் தனியார் நிறுவனம் மூலம் குப்பைகள் அகற்றப்பட்டு வருகிறது. இதில் சேலையூர் கேம்ப்ரோடு அகரம் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள 19, 20, 21 ஆகிய 3 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கேம்ப் ரோடு பகுதியில் கிரசென்ட் அவென்யூ குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள காலி நிலத்தில் கொட்டப்படுகிறது.

பின்னர் அங்கிருந்து வாகனங்கள் மூலம் தனியார் நிறுவனத்தினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை தனியார் நிறுவனம் அப்புறப்படுத்தாததால் காலி நிலம் முழுவதும் குப்பைகள் நிறைந்து கிடக்கிறது. குப்பை அள்ளும் ஊழியர்கள், குப்பைகளை தினமும் அந்த பகுதியிலேயே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் குழந்தைகள், முதியோர்கள் சுவாச கோளாறால் அவதிப்பட்டு வருகின்றனர்.

குப்பைகளில் கோழி இறைச்சி கழிவுகள், ஓட்டலில் இருந்து கொண்டு வரப்படும் கழிவுகளும் கிடக்கின்றன. இதனால் நாய், பன்றி, மாடுகள் குப்பைகளை பிரித்து அசுத்தம் செய்கிறது. இதனால், இந்த பகுதி தாம்பரம் நகராட்சியின் அறிவிக்கப்படாத குப்பை கிடங்காகவே மாற்றப்பட்டு வருகிறது.

தனியார் நிறுவனம் குப்பைகள் அகற்றுவதை நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஆய்வு செய்வதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குப்பைகள் ஒரு இடத்தில் சேர்த்துவைப்பது வழக்கம் என்றாலும், இந்த பணிகளை செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் அதனை தினமும் அகற்றாமல் பாதிக்கும் மேற்பட்ட குப்பைகளை விட்டு செல்கின்றனர். இதனால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதுகுறித்து தாம்பரம் நகராட்சியில் பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், குடியிருப்புகளின் மத்தியில் குப்பைகள் எரிக்கப்படுவது எந்தவகையில் நியாயம் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்த காலி நிலத்தில் கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி, மீண்டும் குப்பைகள் கொட்டாமல் தடுக்க தாம்பரம் நகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story