வன உயிரினங்களை பாதுகாப்பது பொதுமக்களின் கடமை மாவட்ட வன அதிகாரி முகமது சபாப் பேச்சு


வன உயிரினங்களை பாதுகாப்பது பொதுமக்களின் கடமை மாவட்ட வன அதிகாரி முகமது சபாப் பேச்சு
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 12:48 AM IST)
t-max-icont-min-icon

வன உயிரினங்களை பாதுகாப்பது பொதுமக்களின் கடமை என்று மாவட்ட வன அதிகாரி முகமது சபாப் கூறினார்.

உடுமலை,

உலக வனஉயிரின தினத்தையொட்டி ஆனைமலை புலிகள் காப்பகம் திருப்பூர் வனக்கோட்டம் சார்பில் உடுமலையில் பேரணி நடந்தது. பேரணி உடுமலை பாபுகான் வீதியில் உள்ள மாவட்ட வன அலுவலர் அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி நகர முக்கிய வீதிகள் வழியாக சென்று மத்திய பஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது. பேரணியை தொடர்ந்து பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் (ஆர்.ஜி.எம்.பள்ளி) உலக வன உயிரின தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருப்பூர் மாவட்ட வனஅதிகாரி முகமது சபாப் தலைமை தாங்கிபேசும்போது “

புலி, சிங்கம், சிறுத்தை, பனிச்சிறுத்தை ஆகியவற்றின் பாதுகாப்பு குறித்து வனத்துறையினர் பொதுமக்களுக்கு எடுத்துக்கூற வேண்டும். மனிதர்களின் வாழ்வாதாரத்திற்கும், வளத்திற்கும், வளர்ச்சிக்கும் வனங்களும், வன உயிரினங்களும் பெரும் பங்களிக்கின்றன. எனவே வனஉயிரினங்களையும், வனங்களையும் பாதுகாப்பது பொதுமக்களின் கடமை” என்றார்.

வன உயிரின ஆராய்ச்சியாளர் பீட்டர் பிரேம் சக்கரவர்த்தி பேசும்போது “ புலிகளை பாதுகாப்பு மிகவும் அவசியம். கழுதைப்புலி என்ற ஒருவகை புலி காடுகள் தூய்மைப்படுத்தப்படுகிறது.

உலக அளவில் 90 சதவீதத்திற்கும் அதிகமான புலிகள் உள்ள நாடாகிய இந்தியாவில், சிறுத்தைகளும், பனிச்சிறுத்தைகளும் அதிகம் உள்ளன ” என்றார். முன்னதாக பேரணிக்கும், நிகழ்ச்சிக்கும் ஆரண்யா அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். உடுமலை வனச்சரக அலுவலர் நவீன்குமார், அமராவதி வனச்சரக அலுவலர் முருகேசன் மற்றும் வனத்துறை ஊழியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதுபோல் திருமூர்த்தி நகரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் பசுமை மாறா இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில் உலக வன உயிரினநாள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் கோ.திருஞானசம்பந்தம் தலைமை தாங்கினார். விரிவுரையாளர் மேபல் சொரூபராணி வரவேற்று பேசினார். பசுமை மாறா இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன் சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் வன உயிரினங்களை காப்போம்என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன மாணவிகள் உறுதி மொழி ஏற்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

Next Story