வேன் கவிழ்ந்து 10 பேர் காயம் அதிர்ஷ்டவசமாக மணமக்கள் உயிர் தப்பினர்


வேன் கவிழ்ந்து 10 பேர் காயம் அதிர்ஷ்டவசமாக மணமக்கள் உயிர் தப்பினர்
x
தினத்தந்தி 5 March 2018 4:15 AM IST (Updated: 5 March 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே வேன் கவிழ்ந்து 10 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தில் மணமக்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கரூர்,

கரூர் மாவட்டம் ஏவூரை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 30). இவர், பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், திண்டுக்கல் மாவட்டம் பழனி திருவள்ளுவர் நகரை சேர்ந்த பாலசுப்பிரமணி மகள் ஸ்ரீவித்யா (25) என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களுடைய திருமணம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடந்தது.

பின்னர் ஒரு வேனில், மணமக்கள் மற்றும் உறவினர்கள் ஏவூருக்கு சென்றனர். அங்கிருந்து பழனி திருவள்ளுவர் நகரில் உள்ள மணமகள் ஸ்ரீவித்யாவின் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தனர். மணமக்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள் அதே வேனில் பழனி நோக்கி புறப்பட்டனர். வேனை, திருப்பூர் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த முத்து (54) என்பவர் ஓட்டினார்.

கரூர்-திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே அய்யர்மடம் பகுதியில் வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் தாறுமாறாக ஓடியது. டிரைவர் வேனை கட்டுக்குள் கொண்டு வர போராடினார்.ஆனாலும் அது முடியவில்லை.

இதையடுத்து சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் வேனில் வந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி அய்யோ... அம்மா... என்று கூச்சலிட்டனர். இந்த விபத்தில் மணமகன் பெரியசாமி, மணமகள் ஸ்ரீவித்யா மற்றும் உறவினர்கள் முத்துக் குமார் (24), மோகன் (37), பாப்பா (65), மோகன்ராஜ் (75), முத்து (54), சுசிந்திரன் (30) உள்பட 10 பேர் காய மடைந்தனர். இந்த விபத்தில் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக மணமக்கள் உயிர் தப்பினர்.

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினரும், சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும் விரைந்து வந்து அனைவரையும் மீட்டனர். இதுகுறித்து அறிந்ததும் வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story