கிடப்பில் போடப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தால் மாசுபட்டு வரும் வைகை ஆறு


கிடப்பில் போடப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தால் மாசுபட்டு வரும் வைகை ஆறு
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பேரூராட்சி பகுதியில் கழிவு நீரை சுத்திகரிக்க ரூ.7 கோடி செலவில் போடப்பட்ட திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் வைகையாறு மாசுபட்டு வருகிறது.

மானாமதுரை,

மானாமதுரை பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இங்குள்ள 9ஆயிரம் வீடுகளில் சுமார் 32 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். மானாமதுரை நகரில் உள்ள வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தனியார் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மானாமதுரை வைகை ஆற்றுக்குத்தான் செல்கிறது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர் மாசு பட்டு வருவதுடன் மட்டுமல்லாமல் நீரின் சுவையும் மாறி வருகிறது.

தொடர்ந்து வைகை ஆற்றுக்குள் சாக்கடை நீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவி வருகிறது. இதை தடுக்க கடந்த 2010-ம் ஆண்டு ரூ. 7 கோடி செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் மூலம் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மானாமதுரை நகரில் உள்ள தெருக்களில் வரும் சாக்கடை நீரை பாதாள சாக்கடை குழாய் மூலம் இணைத்து மானாமதுரையை அடுத்த ஆதனூர், கண்ணார் தெரு, இடுகாடு அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு அங்கு சாக்கடை நீரை சுத்திகரிப்பு செய்து அதன்பின் வைகை ஆற்றில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு சென்னையில் இருந்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் இங்கு வந்து நேரில் இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் மானாமதுரை பேரூராட்சியில் 25 இடங்களில் கழிவு நீர் சேகரிக்கும் தொட்டி அமைத்து அங்கிருந்து குழாய் மூலம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வர திட்டம் தீட்டப்பட்டது. அதன்படி அந்த திட்டப்பணிகள் முழுவதும் முடிவடைந்து தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி 8 வருடங்களுக்கு மேலாகியும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் இல்லை. கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் தற்போது இந்த திட்ட மதிப்பு இரு மடங்காக உயர வாய்ப்ப்பு உள்ளது. மேலும் வைகை ஆறும் மாசடைந்து வருகிறது. மானாமதுரை வைகை ஆற்றில் நீண்ட நாட்களாக கழிவு நீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக மழைக்காலங்களில் வைகையாற்றில் நீர் வரத்து இருந்தால் கழிவு நீர் தேங்குவதற்கு வாய்ப்பு இருக்காது. கடந்த ஆண்டு வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீருக்காக திறக்கப்பட்ட தண்ணீரும் சிறிதளவு மட்டும் சென்றதால் போதிய பயன்பாடு இல்லாமல் போனது. எனவே மானாமதுரை பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தி கழிவு நீரை சுத்திகரித்து வைகை ஆற்றில் விடும் திட்டத்தை செயல்படுத்தி வைகை ஆற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story