பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க சோலார் விளக்குப்பொறிக்கு மானியம், வேளாண் அதிகாரிகள் தகவல்


பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க சோலார் விளக்குப்பொறிக்கு மானியம், வேளாண் அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 5 March 2018 2:45 AM IST (Updated: 5 March 2018 1:50 AM IST)
t-max-icont-min-icon

உசிலம்பட்டி, வாடிப்பட்டி வட்டாரத்தில் பயிர்களை தாக்கும் பூச்சிகளை அழிக்க சோலார் விளக்குப்பொறிக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று அந்தந்த வட்டார வேளாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உசிலம்பட்டி,,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் தனுஷ்கோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் விளைநிலங்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த சோலார் விளக்குப்பொறிகள் மானிய விலையில் வழங்கப்படவுள்ளது. இந்த சோலார் விளக்குப்பொறியை வைத்து விவசாயிகள் தங்கள் வயல்களில் இரவு நேரத்தில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை பொறி வைப்பதன் மூலம் பூச்சிகளின் தாய் அந்துப்பூச்சிகளை சேகரித்து அழிக்கலாம். இவ்வாறு தாய் அந்துப்பூச்சிகளை அழிப்பதன் மூலம் பூச்சிகளால் பயிர்களுக்கு ஏற்ப்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே தடுத்து விடலாம். மேலும் என்ன வகையான பூச்சிகள் பயிர்களை தாக்க உள்ளது என முன்கூட்டியே அறியலாம். இதனால் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதையும் குறைத்துக் கொள்வதால், ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தினை விவசாயிகள் நடைமுறைப்படுத்தலாம். எனவே 4 ஆயிரத்து 480 ரூபாய் மதிப்பிலான சோலார் விளக்குப்பொறிக்கு ரூ.2 ஆயிரத்தை மானியமாக அரசு சார்பில் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல வாடிப்பட்டி வேளாண்மைக் கோட்டத்தில் பேரணை முதல் கள்ளந்திரி வரை பெரியாறு பாசன கால்வாய் மூலம் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தற்போது கதிர் பிடித்து நன்கு விளைந்து வருகிறது. இந்தநிலையில் இந்த பயிர்களை தாக்கும் புழுக்கள், தாய் அந்துப்பூச்சிகளை அழிக்கவும், அதன் இனப்பெருக்கத்தை தடுக்கவும் விளக்கு பொறி முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது வாடிப்பட்டி வட்டாரத்தில் சூரிய ஒளி மின் சக்தியுடன் கூடிய விளக்குப் பொறிக்கு தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அடிப்படை விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.2 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் சூரிய ஒளி மின்விளக்குப் பொறியினை முழுவிலையில் வாங்கி, வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்கள் பெற சம்பந்தப்பட்ட உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொள்ள வேண்டும். இந்த தகவலை வாடிப்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்துள்ளார். 

Next Story