5 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் சித்தராமையா பேச்சு


5 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 5 March 2018 3:45 AM IST (Updated: 5 March 2018 3:12 AM IST)
t-max-icont-min-icon

5 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

5 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.

தொழில்களை ஊக்குவிக்க...


கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தின் பொன் விழா கொண்டாட்டம் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு பொன் விழாவை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டியது மிக முக்கியமானது. வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதால் மட்டுமே சமூகத்தில் சமூக-பொருளாதார மற்றும் கல்வியில் சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை ஊக்குவிக்க அரசு தயாராக உள்ளது.

5 லட்சம் இளைஞர்களுக்கு...

தொழில் முதலீடுகளுக்கு அரசு பல்வேறு உதவிகளை அளித்து வருகிறது. இதனால் கர்நாடகம் தொழில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக திகழ்கிறது. தொழில் முதலீடுகளுக்கு நல்ல சூழல் நிலவுவதால் கர்நாடகத்திற்கு முதலீடுகள் அதிகமாக வருகின்றன. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மனித வளங்களை வழங்கவும், உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கவும் நாங்கள் தொழிற்பயிற்சி துறையை உருவாக்கி உள்ளோம். 5 லட்சம் இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி வழங்கவும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

தலித்துகள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர் சுய தொழில் செய்ய தேவையான உதவிகளை அரசு செய்கிறது. பெண்களுக்கு என்றே மாநிலத்தில் 5 தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. எல்லா துறைகளிலும் கர்நாடகத்தை முதல் இடத்திற்கு கொண்டு வருவது தான் எங்களின் நோக்கம். அந்த நோக்கத்தை நோக்கி நாங்கள் நடைபோட்டு வருகிறோம்.

ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு

கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்திற்கு சொந்த கட்டிடம் இல்லை. அதனால் சொந்த கட்டிடம் கட்டுவதற்கு இன்று(நேற்று) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி சாதனையில் மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டேவின் பங்கு மிக முக்கியமானது.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

விழாவில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி பேசுகையில், “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியத்தை அணுகி, இன்போசிஸ் நிறுவனம் தொடங்க நிலம் ஒதுக்க கோரினேன். அப்போது அரசு நிலம் ஒதுக்கி கொடுத்தது. இன்று உலக அளவில் இன்போசிஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ந்து நிற்கிறது. கர்நாடகத்தில் எங்கள் நிறுவனத்திற்காக மாநில அரசு 800 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி கொடுத்துள்ளது. எங்கள் நிறுவனம் கர்நாடகத்தில் மட்டும் ரூ.10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடிக்கு மென்பொருள் ஏற்றுமதி செய்தோம்“ என்றார்.

இந்த விழாவில் தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story