வேலூர் ரூ.2½ கோடி செலவில் சிறப்பு பளுதூக்கும் விளையாட்டு மையம்


வேலூர் ரூ.2½ கோடி செலவில் சிறப்பு பளுதூக்கும் விளையாட்டு மையம்
x
தினத்தந்தி 5 March 2018 4:39 AM IST (Updated: 5 March 2018 4:39 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.2½ கோடி செலவில் சிறப்பு பளுதூக்கும் விளையாட்டு மையம் அமைக்கப்பட்டு பணிகள் முடியும் நிலையில் உள்ளதாக மாவட்ட கலெக்டர் ராமன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

வேலூர்,

தமிழகத்தில் விளையாட்டை மேம்படுத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளையாட்டுத் தொடர்பான திட்டங்கள் மற்றும் பல்வேறு கொள்கை முடிவுகளை செயல்படுத்தி வருகிறது. வேலூர் பிரிவு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்றுனர்கள் ஆக்கி, தடகளம், கால்பந்து போன்ற விளையாட்டுகளில் மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி அளித்து, அவர்களை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் வெற்றி பெற செய்துள்ளனர்.

சத்துவாச்சாரியைச் சேர்ந்த சதீஷ்குமார் 2014-ம் ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கமும், 2016-ம் ஆண்டு நடைபெற்ற ரியோ ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு உலக அளவில் 11-வது இடமும், 2017-ம் ஆண்டு காமன்வெல்த் பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் 77 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு தங்கப்பதக்கமும் பெற்று தமிழகத்துக்கும், வேலூருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அதேபோல் தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகளில் வேலூர் மாவட்ட கல்லூரி மாணவிகள் கால்பந்து போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர். நமது மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் பலர் பல்வேறு போட்டிகளில் பல பதக்கங்களை வாங்கி மாவட்டத்துக்குப் பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 40 லட்சம் மதிப்பில் சிறப்பு பளு தூக்கும் விளையாட்டு மையம் அமைக்கப்படும் என மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி, நிதி ஒதுக்கப்பெற்று வேலூர் சத்துவாச்சாரியில் சிறப்பு பளு தூக்கும் மையம் அமைக்கப்பட்டு, பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இந்த மையத்தில் 50 மாணவ- மாணவிகள் தங்கி பயிற்சி பெறும் வகையில் அதிநவீன குளிர்சாதன பயிற்சி கூடம், தங்கும் விடுதி, சரிவிகித உணவு மற்றும் சீருடை போன்றவை வழங்கப்பட உள்ளன.

சிறப்பு பளு தூக்கும் பயிற்சி திட்டத்தில் 42 வீரர், வீராங் கனைகள் ஆண்டு தோறும் ரூ.7 லட்சத்து 89 ஆயிரம் செலவில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பயிற்சி பெற்று வருகிறார்கள். சர்வதேச விளையாட்டு வீரர் கண்டறியும் திட்டத்தின் மூலம் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகளுக்கு அரசு மானியமாக ஆண்டு தோறும் ரூ.23 ஆயிரத்து 360 வழங்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

2 ஆயிரம் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதத்துக்கும் அரசு மானியமாக ரூ.15 ஆயிரம் வீதம் 4 மாதத்துக்கு ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் 743 கிராமப் பஞ்சாயத்துக்களில் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 25 ஆயிரம் நபர்களுக்கு ரூ.51 லட்சத்துக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் 21 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கு பெறும் தனித்திறன் போட்டிகளான நீச்சல், தட களம், தேக்வாண்டோ, ஜிம்னாஸ்டிக்ஸ், குத்துச்சண்டை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு 4 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு, மாநிலப் போட்டிகளில் பங்குப் பெற வழிவகை செய்யப்படுகிறது. மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பை போட்டிகளுக்கு அரசு மானியமாக ரூ.8 லட்சத்து 22 ஆயிரம் வழங்கப்பட்டு 1,500 மாணவ- மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

மாணவர்கள் மட்டும் இல்லாமல் மாவட்ட அளவிலான அரசு ஊழியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் கலந்து கொள்ளும் 300 அரசு அலுவலர்களுக்கு ரூ.50 ஆயிரம் செலவிடப்படுகிறது. ‘டேலண்ட் ஹண்டிங்’ திட்டத்தில் 20 மாணவ- மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 மாத காலம் பயிற்சி அளிக்கப்பட்டு, 20 நபர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.2 லட்சத்து 53 ஆயிரத்து 750 அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 29 ஆயிரத்து 702 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.74 லட்சம் மதிப்பில் உதவித்தொகை, பரிசுகள், உணவு, பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story