சேலத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வை 3,912 பேர் எழுதினர்


சேலத்தில் உதவி பேராசிரியர் பணிக்கான தகுதி தேர்வை 3,912 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 5 March 2018 3:30 AM IST (Updated: 5 March 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நடந்த கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடத்திற்கான மாநில தகுதித்தேர்வினை 3 ஆயிரத்து 912 பேர் எழுதினர். இதில் 394 பேர் தேர்வு எழுத வரவில்லை.

சேலம்,

பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியில் சேர தேசிய அளவிலான (நெட்) அல்லது மாநில அளவிலான (ஸ்லெட்) தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டிற்கான மாநில தகுதித்தேர்வு (ஸ்லெட்) நேற்று தமிழகத்தில் நடைபெற்றது. இந்ததேர்வு சேலம், மதுரை, நெல்லை, சென்னை உள்ளிட்ட 11 இடங்களில் நடைபெற்றது.

இதில் தர்மபுரி மண்டலத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 306 பேர் தகுதிதேர்வினை எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கான தேர்வு மையங்கள் சேலம் அம்மாப்பேட்டை சக்தி கைலாஷ் கல்லூரி, ஸ்ரீகணேஷ் கலை அறிவியல் கல்லூரி, சேலம் சவுடேஸ்வரி கல்லூரி, ராமலிங்கபுரம் ஏ.வி.எஸ். கல்லூரி ஆகிய 4 இடங்களில் அமைக்கப்பட்டு இருந்தது.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய தேர்வில் 10.30 மணி வரை பொதுஅறிவு தொடர்பாகவும், மதியம் 1 மணி வரை பாடம் சார்ந்த தேர்வாகவும் நடைபெற்றன. தர்மபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் நடராஜன் மேற்பார்வையில், பேராசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட்டனர். இந்த தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களில் 3 ஆயிரத்து 912 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். 394 பேர் தேர்வு எழுத வரவில்லை.

முன்னதாக அவர்கள் சோதனை செய்து தேர்வு அறைக்கு அனுமதிக்கப்பட்டனர். மின்சாதன பொருட்களை உள்ளே எடுத்து செல்ல அனுமதிக்கப்படவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்வு மையங்களுக்கு முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. யூ.ஜி.சி. உத்தரவின்படி, கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழகம் தேர்வினை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Next Story