மணமகனின் தாய்-தந்தை பலி: மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் கதறல்


மணமகனின் தாய்-தந்தை பலி: மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் கதறல்
x
தினத்தந்தி 5 March 2018 4:52 AM IST (Updated: 5 March 2018 4:52 AM IST)
t-max-icont-min-icon

ஆம்பூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் மணக்கோலத்தில் வந்த புதுமண தம்பதியினர் கண்ணெதிரிலேயே மணமகனின் தாய், தந்தை பலியானார்கள். அவர்களது உடல்களை பார்த்து புதுமண தம்பதியினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

ஆம்பூர்,

பெங்களூருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 54). இவரது மகன் சசிகுமாருக்கும் (27) வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கத்தை சேர்ந்த சோனியா (வயது 23) என்ற பெண்ணுக்கும் நேற்று காலை பெங்களூருவில் திருமணம் நடந்தது. அதைத்தொடர்ந்து புதுமண தம்பதியினர் மறுவீடு நிகழ்ச்சிக்காக காரில் காவேரிப்பாக்கத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

அவர்களது காருக்கு முன்னால் மற்றொரு காரில் சசிகுமாரின் தந்தை கமலக்கண்ணன், தாயார் வள்ளியம்மாள் மற்றும் உறவினர்கள் 4 பேர் சென்று கொண்டிருந்தனர். காரை பெங்களூருவை சேர்ந்த டிரைவர் சல்மான்கான் (25) ஓட்டி வந்தார். ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு பகுதியில் வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் இருக்க காரின் டிரைவர் ‘பிரேக்’ போட்டுள்ளார். ஆனால் அவரது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து 500 அடி தூரத்துக்கு இழுத்துச்செல்லப்பட்டு சாலையோரம் இருந்த பள்ளத்திற்குள் விழுந்தது.

பின்னால் வந்த காரில் இருந்த புதுமண தம்பதியினர் தங்கள் கண்ணெதிரிலேயே நடந்த இந்த சம்பவத்தை பார்த்து தாங்கள் வந்த காரை நிறுத்தி இறங்கி கதறினர். இதனையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்ட காருக்குள் சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர். அப்போது மணமகனின் தந்தை கமலக்கண்ணன், தாயார் வள்ளியம்மாள் ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

காரில் அவர்களுடன் வந்த உறவினர்களான வேலூரை சேர்ந்த முருகானந்தம் மனைவி மாலாதேவி (49), மகன் கலைச்செல்வன் (9), வாலாஜா அருகே உள்ள அம்மன்தாங்கல் கிராமத்தை சேர்ந்த குமரேசன் மனைவி விஜயலட்சுமி (49), சுரேஷ்பாபு என்பவர் மனைவி சத்தியவதி (32), டிரைவர் சல்மான்கான் ஆகியோர் படுகாயத்துடன் சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக 5 பேரும் வேலூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

திருமணம் முடிந்து மணமகள் வீட்டிற்கு சென்ற போது கார் விபத்துக்குள்ளாகி மணமகனின் பெற்றோர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த கமலக்கண்ணன், வள்ளியம்மாள் உடலை ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமணதம்பதிகள் சசிக்குமார்- சோனியாவும் மணக்கோலத்தில் திருமணத்திற்கு அணிந்திருந்த ஆடையில் காரில் வந்தனர். அவர்கள் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. அவர்களுக்கு அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறினர்.



Next Story