ரஜினிகாந்த், கமல்ஹாசனால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் - நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி


ரஜினிகாந்த், கமல்ஹாசனால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் - நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 6 March 2018 3:45 AM IST (Updated: 6 March 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த், கமல்ஹாசன் என இரு துருவங்களும் அரசியலுக்கு வந்துள்ளதால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் என்று நடிகை வனிதா விஜயகுமார் கூறினார்.

கோவை,

நடிகர் விஜயகுமாரின் மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமார் நேற்று இரவு 7 மணிக்கு திடீரென்று கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அங்கு இருந்த ஊழியர்களிடம் கலெக் டரை சந்தித்து மனு கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

சென்னையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்பதற்காக கலெக்டர் சென்றுவிட்டார் என்று ஊழியர்கள் கூறினார்கள். பிறகு அவர் மாவட்ட வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் எனக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்ய விண்ணப்பித்து உள்ளேன். ஆனால் எனது பெயருக்கு பட்டா மாறுதல் கொடுக்காமல் ஊழியர்கள் இழுத்தடித்து வருகிறார்கள். இதுதொடர்பாக மாவட்ட வருவாய் அதிகாரியை சந்தித்து மனு கொடுத்து உள்ளேன்.

மாநாடு முடிந்து கலெக்டர் வந்ததும், அவரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார். எனவே தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இன்னும் 2 நாட்கள் கழித்து கலெக்டரை சந்திக்க வருவேன். அப்போது எனதுநிலம் எங்கு இருக்கிறது?, அதில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ன? என்பதை உங்களுக்கு தெளிவாக தெரிவிப்பேன்.

நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருகிறார்கள் என்ற பேச்சு தற்போது தமிழகம் முழுவதும் ஏற்பட்டு உள்ளது. இதில் தவறு ஒன்றும் இல்லை. மக்களுக்கு சேவை செய்ய நினைத்தால் யார் வேண்டும் என்றாலும் அரசியலுக்கு வரலாம். இன்னும் நடிகர்கள் பலர் அரசியலுக்கு வருவார் கள் என்று எதிர்பார்க்கிறேன்.

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய 2 பேரும் இரு துருவங்கள். அவர்கள் எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் நடிக்கும் படம் எப்போது வெளியாகும் என்று நாம் காத்திருந்து, படம் வெளியானதும் அதை பார்த்து மகிழ்கிறோம். தற்போது தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் அரசியலுக்கு வந்து உள்ளதால் கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றம் ஏற்படும். அவர்கள் தமிழக மக்களுக்கு நல்லது செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story