கலெக்டர் அலுவலகத்துக்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த பாரத்சேனா அமைப்பினர்


கலெக்டர் அலுவலகத்துக்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த பாரத்சேனா அமைப்பினர்
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்துக்கு பொம்மை துப்பாக்கியுடன் வந்த பாரத்சேனா அமைப்பினர் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

கோவை,

கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வருவாய் அதிகாரி துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் முதியோர் உதவிதொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர். இந்த மனுக்களை பெற்றுக்கொண்ட வருவாய் அதிகாரி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தின் போது சிலர் கைகளில் அட்டை கத்தி மற்றும் பொம்மை துப்பாக்கிகளுடன் நூதன முறையில் மனு கொடுக்க வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர்கள் தாங்கள் பாரத்சேனா அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதி கேட்டு மனு கொடுக்க வந்ததாகவும் கூறினர். இவற்றுடன் மனு அளிக்க அனுமதியில்லை என்று போலீசார் கூறினர்.

இதனை தொடர்ந்து ஒரு வாகனத்தில் பொம்மை துப்பாக்கிகளை வைத்து விட்டு, அந்த அமைப்பின் மாவட்ட தலைவர் மணிகண்டன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ள தாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பினருக்கு மிரட்டல்கள் வருகின்றன. இங்கு சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சிறப்பான பாதுகாப்பு வழங்கும் போலீசாரால் இந்து அமைப்பில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு வழங்க முடியாது. எனவே இந்து அமைப்பினர் தங்களது பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி மாநில தலைவர் யுவராஜா தலைமையில், கோவை மாநகர் தெற்கு மாவட்ட தலைவர் வி.வி.வாசன், தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் கார்த்திக் கண்ணன், துணைத்தலைவர்கள் அருனேஸ்வரன், அருண்பிரகாஷ் மற்றும் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியம் சார்பில் குறிச்சி இட்டேரி பகுதியில் வசித்த மக்களை அப்புறப்படுத்தி அவர்களுக்கு வெள்ளலூர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதில் பல குடும்பங்களுக்கு வீடுகள் முறையாக ஒதுக்காமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். இதில் உரிய முறையில் விசாரணை செய்து சரியான நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கித் தர வேண்டும். இல்லையென்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் சார்பில் பொதுச்செயலாளர் அந்தோணிராஜ் மற்றும் ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு மனுகொடுக்க வந்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மனு கொடுக்க 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறினர். இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது போலீசாரை கண்டித்து டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் திடீரென்று கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உடனே போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் 239 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதில் 21 கடைகள் சமீபத்தில் அரசு உத்தரவுப்படி மூடப்பட்டது. இந்த கடைகளில் பணிபுரிந்தவர்களுக்கு பிற கடைகளில் பணி வழங்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இவர்களுக்கு பாரபட்சம் இன்றி பணி வழங்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊழியர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

Next Story