கணவருடன் சேர்த்து வைக்க கோரி தஞ்சை கோர்ட்டில் 3-வது நாளாக பெண் வக்கீல் தர்ணா


கணவருடன் சேர்த்து வைக்க கோரி தஞ்சை கோர்ட்டில் 3-வது நாளாக பெண் வக்கீல் தர்ணா
x
தினத்தந்தி 6 March 2018 4:30 AM IST (Updated: 6 March 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

கணவருடன் சேர்த்து வைக்க கோரி தஞ்சை கோர்ட்டில் 3-வது நாளாக பெண் வக்கீல் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உதவி செய்யும்படி சட்ட மையத்தில் மனு தாக்கல் செய்தார்.

தஞ்சாவூர்,

தஞ்சை சீனிவாசபுரத்தில் உள்ள சீனிவாசா நகரை சேர்ந்தவர் அன்பழகன்(வயது33). இவர் தஞ்சை கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வக்கீல் சரண்யாவுக்கும்(27) கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23-ந் தேதி திருமணம் நடைபெற்றது. குடும்ப பிரச்சினை காரணமாக கணவனும், மனைவியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மனைவியிடம் இருந்து விவகாரத்து கேட்டு தஞ்சை முதன்மை சார்பு நீதிமன்றத்தில் அன்பழகன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்தநிலையில் கணவர் வீட்டில் வாழ்வதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கூறி தஞ்சை முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண்யா மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் கடந்த 3-ந் தேதி இரவு முதல் முதலாவது மற்றும் 2-வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளின் படியில் அமர்ந்து சரண்யா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். 3-வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் நீடித்தது. மூத்த வக்கீல்கள் பலர் வந்து சமரசம் பேசியும் போராட்டத்தை அவர் கைவிடவில்லை.

இந்தநிலையில் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிராமலிங்கம் தலைமையில் ஏராளமான போலீசார் கோர்ட்டு வளாகத்தில் குவிக்கப்பட்டனர். கோர்ட்டுக்கு வெளியே துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் தலைமையில் போலீசார் நின்று கொண்டிருந்தனர். கோர்ட்டு வளாகத்தில் இருந்து சரண்யாவை அப்புறப்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தால் உடனே அவரை கைது செய்ய தயாராக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் எந்த உத்தரவும் வரவில்லை.

என்னை கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீன் பெற்று வந்து மீண்டும் போராட்டத்தை தொடருவேன் என்றும், தலைமை நீதிபதி இந்த பிரச்சினையில் தலையிட்டு கணவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும் என்றும் சரண்யா தெரிவித்தார். இதையடுத்து சட்ட உதவி மையத்தில் சரண்யா நேற்று மனு தாக்கல் செய்தார்.

அதில், நான் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் எனது வழக்கில் ஆஜராக முடியாது. எனவே என் சார்பில் வாதாட வக்கீல் ஒருவரை நியமனம் செய்து, முதலாவது ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் என் மனு எதற்காக தள்ளுபடி செய்யப்பட்டது என்பதை அறிந்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என் கணவர் வீட்டிற்கு சென்று நான் வாழும் வகையில் ஐகோர்ட்டு கிளையில் உத்தரவு பெற்று அந்த ஆணையை என்னிடம் கொடுத்தால் போராட்டத்தை கைவிடுவேன். அதன்பின்னர் எனது கணவர் வீட்டிற்கு செல்லும்போது என்னை யாராவது அடித்தால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கோர்ட்டிற்கு பல்வேறு வழக்குகள் தொடர்பாக சாட்சி செல்வதற்கு வந்திருந்த பெண்கள் பலர், சரண்யாவை சந்தித்து போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்தனர். சம்பவங்களை முழுமையாக அறிந்தவுடன் சிலர் சரண்யாவுக்கு ஆதரவு அளித்து அவர் அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவருக்கு சிலர் டீ, டிபன் போன்றவற்றையும் வாங்கி கொடுத்தனர். கோர்ட்டு வளாகம் என்பதால் நீதிபதிகள் உத்தரவு இன்றி தாமாகவே செயல்பட போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர். மறைமுகமாக வக்கீல்கள் சிலர் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கிறார்களோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு உள்ளது. இதனால் அவரை அப்புறப்படுத்த முயன்றால் போராட்டம் நடைபெற வாய்ப்பு இருக்கும் என்று சரண்யாவின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர முடியாமல் போலீசார் தவித்து வருகின்றனர்.

இரவு நேரத்திலும் கோர்ட்டு வளாகத்திலேயே படுத்து தூங்குவதற்கு வசதியாக 2 போர்வைகளை அவர் வைத்துள்ளார். அவருக்கு பாதுகாப்புக்காக போலீசாரும் விடிய, விடிய பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

Next Story