2 கார் டிரைவர்களை தாக்கி 15 பவுன் நகை, பணம் பறிப்பு


2 கார் டிரைவர்களை தாக்கி 15 பவுன் நகை, பணம் பறிப்பு
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 3:05 AM IST)
t-max-icont-min-icon

சிங்கபெருமாள்கோவில் அருகே அடுத்தடுத்து 2 கார் டிரைவர்களை தாக்கி 15 பவுன் நகை மற்றும் பணத்தை பறித்துச்சென்ற மர்மகும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

வண்டலூர்,

சென்னை அயனாவரம் ரெயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் ஜெகதீஸ்குமார்(வயது 43). இவர் பெரம்பூரில் உள்ள ரெயில்வே மருத்துவமனையில் தலைமை டாக்டருக்கு கார் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய மனைவி சித்ரா, மகள் மதுமிதா ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு அருகே நடைபெற்ற தனது நண்பர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றார்.

செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்றபோது ஜெகதீஸ்குமாரின் மற்றொரு மகன் யுவராஜுக்கு உடல்நிலை சரியில்லை என்று தொலைபேசி மூலம் தகவல் வந்தது. இதனால் ஜெகதீஸ்குமார் திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் காரில் சென்னை திரும்பினார். சிங்கபெருமாள்கோவிலை அடுத்த மல்ரோஜாபுரம் அருகே வந்தபோது காரை சாலை ஓரம் ஒதுக்குபுறத்தில் நிறுத்தினார்.

தனது மகளை கீழே இறக்கிவிட்டு, ஜெகதீஸ்குமார் காருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தார். அவருடைய மனைவி சித்ரா காரின் உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த 2 வாலிபர்கள் ஜெகதீஸ்குமாரை கத்தியால் சரமாரியாக வெட்டினர்.

இதில் அவரது உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்தது. வலியால் அவர் அலறினார். இதைப்பார்த்த அவருடைய மகள் மற்றும் மனைவி சித்ரா ஆகியோரும் அதிர்ச்சியில் அலறினார்கள்.

உடனே அவர்கள் காரில் உட்கார்ந்திருந்த சித்ராவின் கழுத்தில் கிடந்த 15 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டனர். அப்போது சித்ரா போட்ட சத்தத்தை கேட்டு அந்த வழியாக வந்த சிலர் இதுபற்றி மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த ஜெதீஸ்குமாரை மீட்டு சென்னையில் உள்ள ரெயில்வே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவத்துக்கு சற்று முன்னதாக அதே இடத்தில் கிழக்கு தாம்பரம் மல்லிகா நகரை சேர்ந்த தியாகராஜன்(52) என்ற கால் டாக்சி டிரைவர் சவாரி சென்றுவிட்டு திரும்பியபோது 4 பேர் அவரது காரை வழிமறித்தனர். தியாகராஜனை உருட்டுக்கட்டையால் தாக்கி அவரிடம் இருந்து ரூ.4,800 மற்றும் விலை உயர்ந்த செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றுவிட்டனர்.

இதுபற்றி அவர் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தியாகராஜனை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த 2 சம்பவங்கள் தொடர்பாகவும் மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகின்றனர். இந்த 2 சம்பவங்களில் ஈடுபட்டதும் ஒரே கும்பலா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஒரே நாள் இரவில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த 2 வழிப்பறி சம்பவங்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரத்தில் ரோந்து பணிகளில் அதிக எண்ணிக்கையில் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story