மின்வாரிய துறையில் வேலை வாங்கி தருவதாக, இளநிலை பொறியாளர் ரூ.10 லட்சம் மோசடி


மின்வாரிய துறையில் வேலை வாங்கி தருவதாக, இளநிலை பொறியாளர் ரூ.10 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 6 March 2018 3:45 AM IST (Updated: 6 March 2018 3:15 AM IST)
t-max-icont-min-icon

மின்வாரியத் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், முதியவர் புகார் மனு கொடுத்தார்.

வேலூர்,

சோளிங்கர் தாலுகா தாளிக்கால் பணவட்டம்பாடியைச் சேர்ந்தவர் மணிரெட்டி (வயது 62). இவர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் 5 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகனுக்கு வேலை தேடி வந்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் மூலமாக காட்பாடியைச் சேர்ந்த ஒருவர் அறிமுகம் ஆனார். அவர் அணைக்கட்டு மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். அவர், என்னிடம் மின்வாரியத்துறையில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு அதிக பணம் செலவாகும் என்றும் கூறினார்.

இதையடுத்து முதற்கட்டமாக அவரிடம் ரூ.5 லட்சம் கொடுத்தேன். ஆனால், சில மாதங்கள் ஆகியும் அவர் எனது மகனுக்கு வேலை வாங்கி தரவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, தற்போதைய நிலையில் வேலை வாங்கி கொடுப்பது மிகவும் கடினமாகும். எனவே கூடுதல் பணம் தரவேண்டும் எனக் கூறினார். அதைத் தொடர்ந்து பல்வேறு தவணை களில் ரூ.5 லட்சம் அவரிடம் கொடுத்தேன். அதன்பின்னர் அவர் சொன்னபடி வேலை வாங்கி தரவில்லை.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக அவர் விழுப்புரம் மாவட்டத்துக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அவரை நேரில் சந்திந்து வேலை வாங்கி தருவது குறித்துக் கேட்டேன். சில மாதங்களில் ஏற்பாடு செய்வதாக கூறினார். ஆனால், இதுவரை அவர் வேலை வாங்கி தரவில்லை.

எனவே நான் கொடுத்த ரூ.10 லட்சத்தை திருப்பி தரும்படி கூறினேன். அதையும் தராமல் காலம் கடத்தி வருகிறார். இதனால், நான் மற்றும் எனது குடும்பத்தினர் மிகுந்த மனவேதனையில் இருந்து வருகிறோம்.

மின்வாரியத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.10 லட்சம் வாங்கிக்கொண்டு மோசடி செய்த சம்பந்தப்பட்ட இளநிலை பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நான் கொடுத்த பணத்தைப் பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள்.


Next Story