தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல முயற்சி


தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சென்னைக்கு நடைபயணம் செல்ல முயற்சி
x
தினத்தந்தி 6 March 2018 4:15 AM IST (Updated: 6 March 2018 3:52 AM IST)
t-max-icont-min-icon

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு சேலத்தில் இருந்து சென்னைக்கு நடைபயணம் செல்ல மக்கள் தேசம் கட்சியினர் முயன்றனர். அவர்களுக்கு போலீசார் அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சேலம்,

சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி மக்கள் தேசம் கட்சி சார்பில் சேலத்தில் இருந்து சென்னை தலைமை செயலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு மக்கள் தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் திரண்டனர். பின்னர் அவர்கள், மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப்பாளர் ஏர்போர்ட் காந்தி தலைமையில் 200-க்கும் மேற்பட்டோர் நடைபயணமாக சென்னையை நோக்கி புறப்பட்டனர். ஆனால் அவர்களது நடைபயணத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.

இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கோஷங்களை எழுப்பிய வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஷ், நிர்வாகிகள் சிவா, இளங்கோ, சந்திரிகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, தாழ்த்தப்பட்ட மக்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனவும், அலைக்கழிப்பு செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து மக்கள் தேசம் கட்சியின் மாநில அமைப் பாளர் ஏர்போர்ட் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

சேலம் ஜான்சன்பேட்டை, மணியனூர், உடையாப்பட்டி, சேலத்தாம்பட்டி, அதிகாரிப்பட்டி, ஆண்டிப்பட்டி, நரசோதிப்பட்டி எம்.ஜி.ஆர். நகர் உள்பட பல்வேறு இடங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் 250-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பலமுறை மனு கொடுத்தோம். ஆனால் அதிகாரிகள் மனுவை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பு செய்து வருகிறார்கள். இதனால் சேலத்தில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே, சேலம் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உடனடியாக இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். இல்லாவிட்டால் போலீசாரின் தடையை மீறி கோட்டையை நோக்கி நடைபயணம் செல்வோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story