தற்கொலைக்கு முயன்ற தாய்: சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு


தற்கொலைக்கு முயன்ற தாய்: சிறுமி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 6 March 2018 4:12 AM IST (Updated: 6 March 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். மற்றவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள காட்டுகூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 37). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி செல்வராணி(28). இவர்களுக்கு நிதிஷ்குமார்(8), நிஷாந்த்(7) ஆகிய 2 மகன்களும், இரட்டை பெண் குழந்தைகளான ஸ்ரீமதி(3), ஸ்ரீநிதி(3) ஆகியோரும் உள்ளனர். அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நிதிஷ்குமார் 4-ம் வகுப்பும், நிஷாந்த் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஸ்ரீமதியும், ஸ்ரீநிதியும் அங்கன்வாடி மையத்துக்கு சென்று வந்தனர்.

கனகராஜிக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இதனால் அவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து, தனது மனைவியிடம் தகராறு செய்து வந்தார். கடந்த 28-ந் தேதி மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கனகராஜை, செல்வராணி கண்டித்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கனகராஜ் செல்வராணியையும், தடுக்க முயன்ற குழந்தைகளையும் தாக்கினார்.

இதனால் மனமுடைந்த செல்வராணி, குளிர்பானத்தில் விஷம் கலந்து தனது 4 குழந்தைகளுக்கும் கொடுத்து, பின்னர் அதனை தானும் குடித்தார். சிறிது நேரத்தில் 5 பேரும் மயங்கி விழுந்தனர். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஸ்ரீநிதி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தாள். மற்ற 4 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story