பெரியார் சிலை குறித்து எச்.ராஜா சொன்னது அவருடைய கருத்து தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி


பெரியார் சிலை குறித்து எச்.ராஜா சொன்னது அவருடைய கருத்து தமிழிசை சவுந்திரராஜன் பேட்டி
x
தினத்தந்தி 7 March 2018 2:30 AM IST (Updated: 6 March 2018 9:05 PM IST)
t-max-icont-min-icon

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று எச்.ராஜா சொன்னது அவருடைய சொந்த கருத்து.

நெல்லை,

திரிபுராவில் லெனின் சிலையை அகற்றியது போல் தமிழகத்தில் பெரியார் சிலைகள் அகற்றப்படும் என்று எச்.ராஜா சொன்னது அவருடைய சொந்த கருத்து என்று தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறினார்.

இது குறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:–

நிர்வாகிகளுடன் ஆலோசனை

தமிழ் தாமரை யாத்திரை என்ற பெயரில் தமிழகம் முழுவதும் கட்சியினர் சுற்றுப்பயணம் செய்து கட்சியின் வளர்ச்சி பற்றி ஆலோசனை நடத்தி வருகிறோம். நான் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அந்த பகுதி மக்களின் பிரச்சினைகளை குறித்து ஆலோசனை நடத்தி, அந்த பிரச்சினைகளை மனுவாக தயாரித்து முதல்–அமைச்சரிடம் கொடுக்க உள்ளோம்.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை வெள்ளநீர் கால்வாய் திட்டம், மானூர் பெரியகுளத்திற்கு நிரந்தரமாக தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் மறுவாழ்வு குறித்த திட்டம், நெல்லை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில் விழாக்களில் இரவு கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக தயாரித்து முதல்–அமைச்சரிடம் கொடுக்க உள்ளோம்.

அரசியலில் வெற்றிடம்

தமிழகத்தை பொறுத்தவரை திராவிட கட்சிகளுக்கு மாற்றுசக்தியாக பாரதீய ஜனதா கட்சி திகழும். இது வருகிற தேர்தல்களில் எதிரொலிக்கும். ரஜினி பேசும் போது தமிழக அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டு உள்ளதாகவும், அதை நான்தான் நிரப்ப உள்ளேன் என்று கூறினார். நான் கூறுகிறேன் இந்தியாவில் 22 மாநிலங்களில் ஆட்சி செய்கின்ற பாரதீய ஜனதா கட்சி தான் ரஜினி கூறிய வெற்றிடத்தை நிரப்பும் என்ற நம்பிக்கையில் நாங்கள் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு மக்களின் ஆதரவு பெருகிக்கொண்டே வருகிறது.

தமிழக அரசு மக்களுக்கு நன்மை செய்தால் அதை பாராட்டுவோம். தவறு செய்தால் அதை எதிர்த்து குரல்கொடுப்போம். தமிழகத்தை எதிர்கட்சிகள் போராட்டகளமாக மாற்ற நினைக்கிறார்கள். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை உள்ளது என்றோம். இதை முதல்–அமைச்சர் கலெக்டர் மாநாட்டில் சரி செய்யவேண்டும் என்று கூறி உள்ளார். இது வரவேற்கத்தக்கது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான அனைத்து வேலைகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. ஆரம்பக்கட்ட பணிகளை செய்து விட்டது. ஆனால் தி.மு.க. காவிரி பிரச்சினையை தவறாக கையாண்டு வருகிறது. காவிரி பிரச்சினையில் அரசியல் செய்கிறார்கள். தமிழக பாரதீய ஜனதா கட்சி தமிழகத்தின் உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது.

எச்.ராஜா கருத்து

திரிபுராவில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்றதையொட்டி நடந்த கொண்டாடத்தின் போது லெனினின் சிலையை அகற்றியது போது தமிழகத்தில் வெற்றி பெறும்போது பெரியார் சிலையையும் அகற்றுவோம் என்று எச்.ராஜா கூறி உள்ளாரே என்று கேட்டதற்கு, எச்.ராஜா சொன்னது அவருடைய சொந்த கருத்து, இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. இது குறித்து அவரிடம் விளக்கமாக கேட்டுக்கொள்ளுங்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி நடந்து வருகிறது இதற்காக தமிழக எம்.பி.கள் பாராளுமன்றத்தில் போராடுவது ஏற்றுக்கொள்ளமுடியாது.

 இவ்வாறு தமிழிசை சவுந்திரராஜன் கூறினார். 

Next Story