மேட்டுப்பாளையத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்


மேட்டுப்பாளையத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 March 2018 3:15 AM IST (Updated: 7 March 2018 1:08 AM IST)
t-max-icont-min-icon

மேட்டுப்பாளையத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்,

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு தோல் ஷாப் பகுதியில் 340-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு நகராட்சி சார்பில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சில நாட்களாக சீரான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படு கிறது.

குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவதியடைந்த பொதுமக்கள், அதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், நேற்று காலை 10.15 மணியளவில் மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் தோல்ஷாப் அருகில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் பெண்கள் காலி குடங்களுடன் கலந்துகொண்டு சீராக குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் ரங்கராஜன், இன்ஸ்பெக்டர் சென்னகேசவன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள், சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story