வீட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம் போலீஸ் விசாரணை


வீட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம் போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 7 March 2018 3:45 AM IST (Updated: 7 March 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

வளசரவாக்கத்தில் வீட்டில் அழுகிய நிலையில் ஆண் பிணம் கிடந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்துகிறார்கள்.

பூந்தமல்லி,

வளசரவாக்கம் சவுத்ரி நகர், 8–வது தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ் (வயது70). மின் வாரிய அலுவலகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். அவரது வீட்டில் இருந்து நேற்று முன் தினம் இரவு துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு துரைராஜ் அழுகிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் இவரது மனைவி வனிதா பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன் சென்றுள்ளார் என்றும் மகன் வெளிநாட்டில் உள்ளார் என்றும் துரைராஜ் மட்டும் வீட்டில் தனியாக இருந்தபோது அவருக்கு மாரடைப்பு அல்லது உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்றும் தெரியவந்தது.

அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என்றும் அதனால் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது என்றும் போலீசார் தெரிவித்தனர். அவரது உயிரிழப்புக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்றும் வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story