அ.தி.மு.க.வில் தினகரனின் சிலிப்பர் செல் என்று யாரும் இல்லை, அமைச்சர் மணிகண்டன் பேச்சு


அ.தி.மு.க.வில் தினகரனின் சிலிப்பர் செல் என்று யாரும் இல்லை, அமைச்சர் மணிகண்டன் பேச்சு
x
தினத்தந்தி 7 March 2018 4:15 AM IST (Updated: 7 March 2018 1:18 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க.வில் தினகரனின் சிலிப்பர் செல் என்று யாரும் கிடையாது என அமைச்சர் மணிகண்டன் பேசினார்.

கீழக்கரை,

திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் செ.முருகேசன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயஜோதி, ஒன்றிய அவை தலைவர் உடையத்தேவன், முன்னாள் அவை தலைவர் ராதாகிருஷ்ணன், பாக்கியநாதன், முன்னாள் ஒன்றிய செயலாளர் ராமதாஸ், திருஉத்திரகோசமங்கை பழனிமுருகன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அமைச்சர் மணிகண்டன் கலந்து கொண்டு இலவச வேட்டி-சேலை, தையல் எந்திரம் உள்பட ரூ.5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:-

ராமநாதபுரத்தில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் திருப்புல்லாணி ஒன்றியத்தில் இருந்து 160 வாகனங்களில் வந்து கலந்து கொண்டீர்கள். அந்த நல்ல நாளில் தான் தேர்தல் கமிஷன் நமக்கு கட்சி அங்கீகாரத்தையும், இரட்டை இலை சின்னத்தையும் வழங்கியது. ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட இந்த ஆட்சியை சிலர் கவிழ்க்க நினைக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் வரை இந்த ஆட்சியை யாரும் தொட்டுப்பார்க்க முடியாது. அவ்வாறு கலைக்க நினைப்பவர்கள் உண்மையான அ.தி.மு.க.வினர் இல்லை. டி.டி.வி. தினகரனை நம்பிப்போன 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியிழந்து பரிதாப நிலையில் உள்ளனர். அ.தி.மு.க.வில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் தனி அணியாக பிரிந்தபோது அப்போது துணை பொது செயலாளராக இருந்த டி.டி.வி.தினகரன் தங்க தமிழ்செல்வனுக்கு அமைச்சர் பதவி கொடுக்க விரும்பவில்லை. அப்படிப்பட்ட தினகரனோடு தங்க தமிழ்செல்வன் இணைந்து செயல்படுவது தவறானது.

பல்வேறு சமுதாயங்கள் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை நடத்தி வருகிறோம். இலங்கையில் சேதமடைந்த ராமேசுவரம் மீனவர்களின் 18 படகுகளுக்கு ரூ.90 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பு அரசியலுக்கு வந்த கமல்ஹாசன் கூட தனிக்கட்சி, தனிக்கொடி ஆகியவற்றை அறிவித்துள்ளார். அதேபோல தினகரன் அணியினரும் தனிக்கட்சி, கொடியை பயன்படுத்த வேண்டும். எங்களது இரட்டைஇலை சின்னத்தை, கொடியை பயன்படுத்தக்கூடாது. மானிய இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு 2 ஆயிரம் பேருக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விஷயத்தில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் எதிர்க்கட்சி தலைவரை நேரில் அழைத்து ஆலோசித்து நல்ல முடிவை முதல்-அமைச்சர் எடுத்து வருகிறார். இதுபோன்ற நல்ல பணிகளுக்கு வரவேற்பு அளிக்காவிட்டாலும் தினகரன் அணியினர் கெடுதல் செய்யக்கூடாது. அ.தி.மு.க.வில் தினகரனின் சிலிப்பர் செல் என்று யாரும் கிடையாது. அந்த சிலிப்பர் செல் எல்லாம் இறந்த செல் ஆகிவிட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story