சுவர் இடிந்து விழுந்து பெண் பலி வீட்டில் பட்டாசு தயாரித்த போது விபத்து


சுவர் இடிந்து விழுந்து பெண் பலி வீட்டில் பட்டாசு தயாரித்த போது விபத்து
x
தினத்தந்தி 7 March 2018 4:30 AM IST (Updated: 7 March 2018 2:14 AM IST)
t-max-icont-min-icon

சாமல்பட்டியில் வீட்டில் பட்டாசு தயாரித்த போது ஏற்பட்ட விபத்தில் சுவர் இடிந்து விழுந்து பெண் பலியானார்.

ஊத்தங்கரை,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த சாமல்பட்டியை சேர்ந்தவர் இஸ்மாயில். இவரது மனைவி சர்தாணி(வயது 55). கூலித்தொழிலாளி. இவர், வாணவேடிக்கையில் பயன்படுத்தப்படும் பட்டாசு வெடிகளுக்கு சணல் கயிறு சுற்றும் பணி செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று வழக்கம் போல் சர்தாணி, வெடிகளுக்கு சணல் கயிறு சுற்றிக் கொண்டிருந்தார்.

அப்போது, எதிர்பாராதவிதமாக பட்டாசு வெடித்ததில், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கிய, சர்தாணி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ஜூனன், சாமல்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரபத்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த வாண வேடிக்கை விற்பனை செய்ய அனுமதி பெற்றவரிடம், சர்தாணி பட்டாசு வெடிகளுக்கு சணல்கயிறு சுற்றி தரும் வேலையை செய்து வந்ததும், அப்போது ஏற்பட்ட விபத்தில் வீட்டு சுவர் இடிந்து விழுந்து சர்தாணி பலியானதும் தெரிய வந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story