சி.எம்.டி.ஏ. நிர்வாகத்தை கண்டித்து உணவு தானிய வணிகர் சங்கத்தினர் கடை அடைப்பு போராட்டம்


சி.எம்.டி.ஏ. நிர்வாகத்தை கண்டித்து உணவு தானிய வணிகர் சங்கத்தினர் கடை அடைப்பு போராட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 4:00 AM IST (Updated: 8 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு உணவு தானிய கிடங்கு பராமரிப்பு பணி, அங்காடி நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதை கண்டித்து கோயம்பேடு உணவு தானிய வணிகர் சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோயம்பேடு,

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மலர், கனி, காய்கறி என 3 பிரிவுகளாக அங்காடிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை அங்காடி நிர்வாக குழுவே பராமரித்து வருகிறது.

இதற்கிடையில் அதே வளாகத்தில் 400-க்கும் மேற்பட்ட கடைகள் அடங்கிய உணவு தானிய மொத்த கிடங்கு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் தானிய கிடங்கின் பராமரிப்பு உணவு தானிய வணிகர் சங்கத்தினரிடமே ஒப்படைக்கப்பட்டது.

இதனால் 2015 டிசம்பர் மாதம் முதல் 2018 பிப்ரவரி மாதம் வரை கழிவுகள் அகற்றம், மின் விளக்குகள், துப்புரவு பணி என அனைத்து பணிகளையும் உணவு தானிய வணிகர்களே பராமரித்து வந்தனர்.

இந்தநிலையில் பராமரிப்பு பணிகள் உணவு தானிய வணிக சங்கத்தினரிடம் இருந்து பறிக்கப்பட்டு அதிரடியாக அங்காடி நிர்வாக குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தங்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லாமல் சி.எம்.டி.ஏ. நிர்வாகம் தங்களை புறக்கணித்ததாக கூறி சி.எம்.டி.ஏ. நிர்வாகத்தை கண்டித்து நேற்று தலைவர் சா.சந்திரேசன் தலைமையில் உணவு தானிய வணிகர் சங்கத்தினர் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உணவு தானிய கிடங்கின் பராமரிப்பு பணியை அங்காடி நிர்வாக குழுவே பார்த்துக்கொள்ளட்டும். ஆனால் மலர், கனி, காய்கறி அங்காடிகள் போல் குப்பைகள் சேர விட்டு துர்நாற்றம் ஏற்படும் நிலை ஏற்படுத்தாமல் ஏற்கனவே இருந்தது போல் அனுதினமும் குப்பை கழிவுகளை அகற்றி, துப்புரவு பணி தொடரவேண்டும் என்பதே பொதுமக்கள், வியாபாரிகள், உணவு தானிய கிடங்கு நிர்வாகிகளின் மிகுந்த எதிர்பார்பார்பாக உள்ளது. 

Next Story